புது டில்லி பிரிக்ஸ் மாநாடு : மோடி, புதினுடன் பிரதமர் அன்வார் உயர்மட்டச் சந்திப்பு

11 செப்டெம்பர் 2026, 3:17 AM
புது டில்லி பிரிக்ஸ் மாநாடு :  மோடி, புதினுடன் பிரதமர் அன்வார்  உயர்மட்டச் சந்திப்பு

புது டெல்லி, செப் 10 - இவ்வார இறுதியில் இந்தியாவின் தலைநகரில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக, மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்.

அப்பயணத்தின் போது, அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

“மோடி , புதின் இரு உலகத் தலைவர்களுடனான சந்திப்புடன், உச்சநிலை மாநாட்டுக்கு இடையே ஈரான் அதிபர் , கசகஸ்தான் அதிபர் , எத்தியோப்பியப் பிரதமர் ஆகியோரையும் பிரதமர் அன்வார் சந்திக்கவுள்ளார்.

இவை இதுவரை ஒப்புக் கொள்ளப்பட்ட இரு தரப்பு பேச்சுவார்த்தைகள்” என மலேசியாவின் தற்காலிக தூதர் மற்றும் துணைத் தூதருமான ஷரீபா எஸ்நீதா வஃபா (Sharifah Ezneeda Wafa) மலேசிய ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மலேசியா 'பிரிக்ஸ் பங்காளி நாடு' என்ற முறையில் அந்த உச்சநிலை மாநாட்டில் பங்கேற்கிறது.

பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டு சீர்திருத்தங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் அந்த உச்சநிலை மாநாடு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது.

நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வாருடன், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி மற்றும் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோரும் இப்பயணத்தில் உடன் செல்கின்றனர்.

பிரதமர் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த சந்தை அளவு 3.88 பில்லியன் மக்களை உள்ளடக்கியுள்ளது.

அதன் கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 29.85 டிரில்லியன் அமெரிக்க டாலர் (RM121.6 டிரில்லியன்) ஆகும்.

இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27.1 விழுக்காட்டை வகிப்பதால், உறுப்பு நாடுகளின் பொருளாதார திறன்களை மேம்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு என மலேசியாவின் தற்காலிக தூதர் ஷரீபா எஸ்நீதா வஃபா தெரிவித்தார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் தொடங்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பு, பின்னர் 2011-இல் தென்னாப்பிரிக்காவையும், 2023-இல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தையும், 2024-இல் இந்தோனேசியாவையும் இணைத்துக் கொண்டு விரிவடைந்தது.

மலேசியா, பெலாரஸ், பொலிவியா, கசகஸ்தான், கியூபா, நைஜீரியா, தாய்லாந்து, வியட்நாம், உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் பிரிக்ஸ் பங்காளி நாடுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தனது தென்னிந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாக, அன்வார் கேரளாவுக்கும் செல்லவுள்ளார்.

அங்கு அவர் இந்தியாவின் கிராண்ட் முஃப்தி ஷேக் அபுபக்கர் அகமதுவைச் சந்தித்து, சமூக மேம்பாடு மற்றும் மத நல்லிணக்கம் குறித்துக் கலந்துரையாடுவார்.

மேலும், கேரளம் முதல்வர் திரு வி. டி. சதீசன் மற்றும் மாநில ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோரையும் சந்தித்து வர்த்தகம், சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்துப் பேசுவார்.

மலேசியா-இந்தியா இடையிலான ஒட்டுமொத்த வர்த்தகம் 2024-இல் இருந்த RM83.50 பில்லியனிலிருந்து 2025-இல் 5% குறைந்து RM79.33 பில்லியனாக பதிவாகியுள்ளது.

இந்தியாவிற்கான மலேசியாவின் ஏற்றுமதி 0.4% அதிகரித்து RM52.35 பில்லியனாக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலிருந்து மலேசியாவின் இறக்குமதி 14% குறைந்து RM26.98 பில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது.

2025-ஆம் ஆண்டின் இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு முதலீடு 5.6 பில்லியன் அமெரிக்க டாலரை (RM22.8 பில்லியன்) எட்டியுள்ளது.

இதில் பெட்ரோனாஸின் கெந்தாரி (Gentari), யுஎம்டபிள்யூ குழுமம் (UMW Group) மற்றும் சிலாங்கூரை தளமாகக் கொண்ட செல்கான் நிறுவனம் (Selcon Bhd) ஆகியவை முக்கிய முதலீட்டாளர்களாக உள்ளன.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.