மீரி , செப் 9 - நேற்று சரவாக், லொங் லெல்லாங்கில் விபத்துக்குள்ளான 'பறக்கும் மருத்துவர் சேவை' ஹெலிகாப்டரில் பயணித்த அனைத்து ஐவரின் அடையாளத்தைப் போலீஸ் உறுதிப்படுத்தியது.
ஹெலிகாப்டரில் இறந்தவர்கள் அமர்ந்திருந்த இடம், துண்டு துணி, உடல்களில் இருந்த பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த ஐவரும் அடையாளம் காணப்பட்டதாக, சரவாக் போலீஸ் ஆணையர் டத்தோ மொஹம்மட் சய்னால் அப்துல்லா தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைக்காக உடல்கள் மீரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. ஹெலிகாப்டர் விழுந்த உடனேயே தீப்பற்றியதால் உடல்கள் கருகிய நிலையிலேயே மீட்கப்பட்டதாக டத்தோ மொஹம்மட் கூறினார்.
குடும்பத்தினரிடமிருந்து மரபணு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது . அதைக் கொண்டு அதிகாரப்பூர்வமாக மீட்கப்பட்ட உடல்களை அடையாளப் படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றாரவர்.
மீரி விமான நிலையத்தில் , அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
கேப்டன் சய்னோல் அஃபிக் பீ ஷாம் ( வயது 30 ), மருத்துவர் டாக்டர் அய்னுல் பரா கமாருடின் ( 33 ), மருத்துவ உதவியாளர் அலெக்சென் அடித் ஹென்ரி ( 31) , இரு தாதியர்களான டெப்ரா மொசெட் ( 40), ஜெச்ஸி பயா ஜோக் ( 44 ) ஆகியோர் ஹெலிகாப்டர் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர்.
இதனிடையே, ஹெலிகாப்டர் , ஓடுதளத்தின் கடைசி மூளையில் விழுந்ததைப் பார்க்கும்போது, விமானி பாதுகாப்பாக ஹெலிகாப்டரைத் தரையிறக்க முற்பட்டிருக்கலாமென தாம் நம்புவதாக டத்தோ மொஹம்மட் கூறினார்.
தரையிறக்கப்பட்ட உடனே தீப்பற்றியதால், ஹெலிகாப்டரில் இருந்த யாரும் தப்பிக்க முடியாமல் போயிருக்கலாமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த ஹெலிகாப்டரில் கட்டுப்பாட்டு அறையின் குரல் பதிவுக் கருவி அல்லது கருப்பு பெட்டி இல்லை. மேலும் விபத்துக்கு முன்னதாக எந்தவோர் அவசர அழைப்பும் பெறப்படவில்லை எனவும் அவர் கூறினார்.




