கோலாலம்பூர், செப் 9 : சரவாக், லொங் லெல்லாங் ( Long Lellang) ஹெலிகப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அப்பணி இன்று காலை மணி 7.30-க்குத் தொடங்கியதாக, சுகாதார அமைச்ச்ர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
அரச மலேசிய போலீஸ் படையும், தீயணைப்பு மீட்பு படையும் , அந்த மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டவுடன் , அவற்றைப் பெற்றுக் கொள்ள மீரி மருத்துவமனை தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
ஹெலிகப்டர் விழுந்து விபத்துக்குள்ளான பகுதி , உட்புறமான பகுதி என்பதோடு அப்பகுதியைச் சென்றடைவதும் சவால் மிக்க ஒன்றாக உள்ளது.
அதையடுத்து, மீட்பு பணி குறித்த அவ்வப்போதைய தகவல்களை சுகாதார அமைச்சு பெற்றுவருமென, அவர் இன்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இச்சம்பவத்தை அடுத்து 3 முக்கிய விவகாரங்களுக்கு சுகாதார அமைச்சு உடனடி முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
பறக்கும் மருத்துவர் சேவையில் ( Flying Doctor Service) ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வது, விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சமூகநலனை உறுதிச் செய்வது, உட்புறப் பகுதியில் உள்ள சமூகத்துக்கான சுகாதார பராமரிப்பு சேவையைத் தொடர்வது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் செலுத்தப்படுமென டாக்டர் சுல்கிப்ளி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சுகாதார அமைச்சு , உளவியல் ரீதியான முதலுதவியை வழங்கியிருக்கும் வேளையில் , நிதி உதவிக்கும் ஏற்பாடு செய்யும்.
நேற்று,விமானி உட்பட ஐவரை ஏற்றியிருந்த BO-105 ஹெலிகப்டர், சரவாக் உலு பெர்னாமில் உள்ள, குறுகிய தூர ஓடுதளத்தைக் கொண்ட லொங் லெல்லாங் விமான நிலையத்திற்கு அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.




