ஷா ஆலாம், செப் 5 : சுபாங் பெஸ்தாரி சுற்றியுள்ள சில இடங்களில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் சாலை உள்வாங்கும் பிரச்சினைக்கு, இம்மாதம் தொடங்கி நவம்பர் இறுதி வரை மேற்கொள்ளப்படவுள்ள பழுதுபார்ப்புப் பணிகள் மூலம் தீர்வு காணப்படவுள்ளது.
இந்த வேலைகளில் பெர்சியாரான் அத்மோஸ்பெரா (Persiaran Atmosfera), பெர்சியாரான் சாகேராவாலா (Persiaran Cakerawala) மற்றும் பெர்சியாரான் யுரேனஸ் (Persiaran Uranus) ஆகியவற்றின் சில பகுதிகள் உள்ளடக்கப்படும் என்றும்,
பழுதுபார்ப்பு காலத்தில் சாலைகள் படிப்படியாக (secara berperingkat) மூடப்படும் என்றும் கோத்தா டாமன்சாரா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் இசுவான் காசிம் தெரிவித்தார்.
பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகத்திற்கு (PDT Petaling) எதிரே உள்ள பெர்சியாரான் அத்மோஸ்பெரா பகுதியே முக்கியமாகக் கவனம் செலுத்தப்படும் இடமாகும்.
அங்கு நிலத்தடி நீர் ஓட்டத்தின் காரணமாகவே சாலை உள்வாங்கியதாக நம்பப்படுகிறது.
10 முதல் 15 ஆண்டுகள் வரை நீடித்துள்ள இப்பிரச்சினையால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
தற்போது இந்த வேலைகளைத் தொடங்குவதற்கு ஷா ஆலாம் மாநகராட்சி (MBSA), வோர்ல்ட்வைட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (Worldwide Holdings Berhad) மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
சாலைப் பழுதுபார்ப்புடன் சேர்த்து, ஹெல்ப் பல்கலைக்கழகம் (HELP University) முதல் பெட்ரோனாஸ் சந்திப்பு வரையிலான பகுதியில் இயங்காமல் இருக்கும் தெருவிளக்குகளைச் சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
இப்பணிகள் முடியும் வரை பொதுமக்கள் பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





