தேசிய வகை ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நேர்த்தி நிறை, ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா; துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து சிறப்பித்தார்

8 டிசம்பர் 2025, 3:21 AM
தேசிய வகை ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நேர்த்தி நிறை, ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா; துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து சிறப்பித்தார்

பெஸ்தாரி ஜெயா, டிச 8- பெஸ்தாரி ஜெயாவில் அமைந்துள்ள தேசிய வகை ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நேர்த்தி நிறை, ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு பிரமுகராக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.

தோட்டப்புறத்தில் ஒரு மாளிகை என்று தான் இந்த பள்ளி வர்ணிக்கப்படுகிறது. அங்கு நேரில் சென்று பார்த்தப் போது உண்மையில் பெருமைப்படும் வகையில் தான் பள்ளி செயல்பட்டு வருகிறது என்று சிறப்புரையாற்றிய அவர் கூறினார்.

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பள்ளியின் அமைப்பு சிறப்பாகவே உள்ளன. தலைமையாசிரியர் திருமதி மகேஸ்வரி சுப்ரமணியம் தலைமையில் இப்பள்ளி பல்வேறு உருமாற்றங்களை கண்டுள்ளது.

100 ஆண்டை எட்டவிருக்கும் இந்த பள்ளி சுற்றுவட்டார தோட்டங்களின் சரித்திரப்பூர்வ சான்றாக அமைகிறது.

இத்தோட்ட பள்ளியை கட்டி காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக மடானி அரசாங்கம் பல உதவிகளை வழங்கி வருகிறது. எனவே, தமிப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.

குறிப்பாக பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

இதற்கு இத்தோட்ட தமிழ்ப்பள்ளி சிறந்த உதாரணமாக திகழ்கிறது. தொலைவில் இருந்தாலும் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை இந்த பள்ளிக்கு அனுப்புகின்றனர். இது உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயமாகும்.

இந்த பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் போக்குவரத்து பிரச்சினையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டது.

அடுத்தாண்டு முதலாம் ஆண்டிற்கு இதுவரையில் 7 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக தலைமையாசிரியர் கூறியிருந்தார். இன்னும் கூடுதலாக 10 மாணவர்கள் இப்பள்ளியில் பயில பதிவு செய்தால் அந்த 10 மாணவர்களுக்கான போக்குவரத்து பொறுப்பினை தாம் ஏற்றுக் கொள்வதாக துணையமைச்சர் சரஸ்வதி வாக்குறுதி அளித்தார்.

சாதிக்க தயாராக இருக்கும் ஆசிரியர்களுக்கு நாம் ஒத்துழைப்பாக இருந்தால் தான் மாணவர்களின் கல்வியும் தமிழ்ப்பள்ளிகளும் மேம்பாடு கானும்.

பள்ளிக்கூடம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பது முக்கியமல்ல. பள்ளியில் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும் கல்வியும் தன்னம்பிக்கையும் தான் அவசியமானது என்பதை பெற்றோர்கள் உட்பட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இப்பள்ளியில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினேன். சிறிய பள்ளியாக இருந்தாலும் சிறப்பாக செயல்படும் தலைமையாசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளையும் நன்றியும் தெரிவித்தார்.

இவ்விழாவில் கல்வியில் சிறந்த விளங்கிய மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டன. ஆறாம் ஆண்டை முடித்து இடைநிலைப்பள்ளிக்கு செல்லும் இரு மாணவர்களுக்கு பட்டமளிப்பு அங்கமும் இடம் பெற்றது.

மாநில கல்வி இலாகாவை பிரநிதித்து சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி, பாலர்பள்ளிகளின் துணை இயக்குனர் மணிசேகர், கோலசிலாங்கூர் மாவட்ட ஆரம்பப்பள்ளி, பாலர் பள்ளிகளின் துணை இயக்குனர் சுல்கிப்ளி பின் ஜைனி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜெயலட்சுமி உட்பட பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.