ஷா ஆலாம், செப் 5: சரவாக்கில் உள்ள செரியான் (Serian) பகுதியில் காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு இன்று காலை 7 மணி நிலவரப்படி 390 -ஆகக் குறைந்த போதிலும், அது இன்னமும் 'அபாயகரமான' பிரிவிலேயே உள்ளது.
சரவாக்கின் மேலும் மூன்று இடங்கள் 'மிகவும் ஆரோக்கியமற்றப்' பிரிவில் பதிவாகியுள்ளன. கூச்சிங் (277) சமரஹான் (271), ஸ்ரீ அமான் (261) ஆகியப் பகுதிகளில் காற்றின் தரம் இன்னும் மோசமாகவே உள்ளன.
இவற்றுடன், மலேசியாவின் 25 பகுதிகள் 'ஆரோக்கியமற்ற' காற்றுத் தரத்தைப் பதிவு செய்துள்ளன.
சரவாக்கில் பிந்துலு (189), சாமாலாஜு (188), முக்கா (183), மிரி ILP (181), சரிகேய் (179), மிரி (174), சிபு (174) மற்றும் லபுவான் (160) ஆகியவை இதில் அடங்கும்.
ஜொகூரில் லார்க்கின் (156), பத்து பஹாட் (155), குளுவாங் (154), பாசிர் கூடாங் (154), செகாமட் (152), கோத்தா திங்கி (152) மற்றும் தங்காக்கிலும் (152) ஆரோக்கியமற்ற நிலை பதிவாகியுள்ளது.
மேலும், சிலாங்கூரின் ஜோஹான் செத்தியா (152), மலாக்காவின் புக்கிட் ரம்பாய் (151), பகாங்கின் ரொம்பின் (128) மற்றும் சாபாவின் கோத்தா கினபாலு (108) ஆகிய பகுதிகளும் ஆரோக்கியமற்ற பிரிவில் உள்ளன.
செரியான் பகுதியில் காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு 500-க்கும் மேல் தாண்டியதை அடுத்து, பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, நேற்று பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அப்பகுதி முழுவதும் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டு (IPU) அளவுகோல் விவரம்:
0–50: நன்று
51–100: மிதமானது
101–200: ஆரோக்கியமற்றது
201–300: மிகவும் ஆரோக்கியமற்றது
300-க்கும் மேல்: அபாயகரமானது




