கோலாலம்பூர், செப் 4 : புகை மூட்டம் அபாயகர நிலையை எட்டியதை அடுத்து, சரவாக், செரியான் (Serian) முழுவதும் , இயற்கைப் பேரிடர் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்துள்ளார்.
பிரதமர், சரவாக் பிரிமியர் ( முதலமைச்சர்) மற்றும் தொடர்புடைய அமைப்புகள் ஆகியத் தரப்புகளின் ஆலோசனையின் படி அந்த முடிவு எடுக்கப்பட்டதாக, பிரதமர் அலுவலகம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
"பாதிக்கப்பட்ட பகுதியில் மக்களின் சுகாதாரத்தையும் சமூகநலனையும் பேண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அப்பகுதியில் அவ்வப்போதைய நிலையை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும். தேவையான அனைத்து முயற்சிகளும் முறையாக அமல்படுத்தப்படுவது உறுதிச் செய்யப்படும்.
புகை மூட்டப் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள், பொது மக்களுக்கு சுகாதாரத் தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்குதல் ஆகியவை அந்த முயற்சிகளில் அடங்கும்" என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று மதியம் மணி 2 நிலவரப்படி, செரியானில் காற்றுத் தூய்மைக் கேடு 521-ஆக மிக ஆபத்தான அளவைப் பதிவுச் செய்தது.

இதற்கு முன்பு சரவாக்கில் 1997-ஆம் ஆண்டு, புகை மூட்டம் காரணமாக அம்மாநிலம் முழுவதும் பேரிடர் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இதே பிரகடனம் , புகை மூட்டம் மோசமடைந்ததால் 2005 ஆகஸ்டில் குவாலா சிலாங்கூரிலும் கிள்ளானிலும் , 2013 ஜூனில், ஹோகூரில் சில மாவட்டங்களிலும் பேரிடர் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.





