பெட்டாலிங் ஜெயா, செப் 4: 'ஸ்பீட் சிலாங்கூர்' (Speed Selangor) முயற்சியின் கீழ், என்.எக்.ஸ்பி நிறுவனத்தின் (NXP Malaysia Sdn Bhd) விரிவாக்கத் திட்டத்திற்கான அனுமதி விரைவுப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த விரைவான மேம்பாட்டு ஒப்புதல் விண்ணப்பதாரர்களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தியிருக்கிறது.
அதோடு மாநிலத்தின் முதலீட்டுச் சூழல் அமைப்பின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் அது அதிகரித்துள்ளதாகப் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத் தலைவர் டத்தோ முகமட் யாசிட் சைரி தெரிவித்தார்.
அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னதாக, நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப ஆவணங்கள் முன்கூட்டியே பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய, விண்ணப்பதாரர்கள், உராட்சி மன்ற அதிகாரிகள் (PBT) மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை உட்படுத்திய சந்திப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.
"நன்மைகளைப் பொறுத்தவரை, அது நேரத்தை மிச்சப்படுத்துவதால் மேம்பாட்டாளர்கள் பணிகளைத் தொடங்குவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை.
மேலும், இது செலவுக் குறைப்பிற்கும் வழிவகுக்கும். நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் போது , தொழில்துறை அல்லது விண்ணப்பதாரர் ஏற்க வேண்டிய பொதுச் செலவுகள் (overhead costs) அதிகமாகும் " என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற(MBPJ) கோபுரத்தில் நடைபெற்ற, ஸ்பீட் சிலாங்கூர்@எம்பிபிஜே (Speed Selangor@MBPJ) முயற்சியின் கீழ் மேம்பாட்டுத் திட்ட ஒப்புதல் வழங்கும் விழாவிற்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விரைவான ஒப்புதல் நடைமுறை என்பது ஒழுங்குமுறை அம்சங்கள் புறக்கணிக்கப்படுவதைக் குறிக்காது.
ஏனெனில், விண்ணப்பதாரர்கள் திட்டமிடல், பொறியியல் மற்றும் நிலப்பரப்பு உள்ளிட்ட அனைத்து நிர்ணயிக்கப்பட்ட மேம்பாட்டு நிபந்தனைகளையும் இன்னும் கடைப்பிடிக்க வேண்டும்.
" ஒப்புதல் அளிக்கப்பட்டது போல் மேம்பாட்டாளர், விண்ணப்பதாரர் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் செயல்படுத்தப்படாவிட்டால், அந்தந்த துறை அல்லது அமைப்புகள் பயன்படுத்தப்படும் சட்டடப் பிரிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்குள் ஒப்புதல் கிடைத்தது, மேம்பாட்டு நடைமுறையை விரைவுபடுத்துவதற்கான சிலாங்கூரின் திறன் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது என என்.எக்.ஸ்பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூன் பென் நீ தெரிவித்தார்.
"இது மலேசியாவிலிருந்து மட்டுமல்லாமல், அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் உள்ள பெருநிறுவன முதலீட்டாளர்களுக்கும் சிலாங்கூர் எவ்வளவு விரைவாக ஒப்புதல் அளிக்கிறது மற்றும் அதிக வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்பதைக் காணும் உயர் நம்பிக்கையை அளிக்கிறது," என்று அவர் கூறினார்.
இதனிடையே, என்எக்ஸ்பி-யின் விரிவாக்கம் ஆபரேட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மின்சுற்று வடிவமைப்பு (IC design), திட்ட மேம்பாடு மற்றும் சோதனை மேம்பாடு ஆகிய துறைகளில் அதிக மதிப்புள்ள வேலைகளையும் உருவாக்குகிறது என கூன் பென் நீ தெரிவித்தார்.





