ஷா ஆலாம், செப் 1 - மஹா(MAHA) விவசாயக் கண்காட்சியை ஒட்டி வர்த்தக- முதலீட்டு வாய்ப்புகளைப் பெறும் முயற்சிகளின் கீழ், 149 கோடி ரிங்கிட் பெருமானமுள்ள 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகியுள்ளன.
நாட்டின் விவசாய - உணவுப் பாதுகாப்புத் துறையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அது பிரதிபலித்திருப்பதாக, விவசாய - உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

அந்த ஒப்பந்தங்கள் விவசாயம் சார்புடைய நடவடிக்கைகள், உற்பத்தி, பதப்படுத்துதல், கால்நடை வளர்ப்பு, ஹலால் தயாரிப்புகள், அன்னாசி சாகுபடி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளன.
இந்த முதலீடுகளில் மிக முக்கியமானத் திட்டமாக, சரவாக் மாநிலத்தின் மிரி, துகாவ் (Tukau,Miri) பகுதியில் RM1.031 பில்லியன் செலவில் அமையவிருக்கும் அன்னாசிப்பழ உணவுத் தயாரிப்பு ஆலை விளங்குகிறது.

இது தவிர, உயர் தொழில்நுட்ப கோழிப் பண்ணையின் விரிவாக்கம், விவசாயப் பொருள் விநியோகம் மற்றும் அன்னாசி பயிருக்கான சிறப்பு உரத் தயாரிப்பு போன்ற முதலீடுகளும் இதில் அடங்கும்.
இவ்வாண்டு மஹா விவசாயக் கண்காட்சியின் வழி, 800 கோடி ரிங்கிட் முதலீட்டை ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அடுத்த ஆண்டு மலேசியாவைத் தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் தீவிர எல் நினோ (El Nino) மற்றும் கடுமையான காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்காக, 2027 வரவுசெலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரி நிதி அமைச்சுடன் தொடக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக முகமட் சாபு கூறினார்.





