MAHA விவசாயக் கண்காட்சி : 2,000 உணவு உற்பத்தியாளர்கள் பங்கேற்பு

12 ஆகஸ்ட் 2026, 10:10 AM
MAHA விவசாயக் கண்காட்சி  : 2,000 உணவு உற்பத்தியாளர்கள் பங்கேற்பு

செர்டாங், ஆகஸ்ட் 12 : மலேசிய விவசாயம், தோட்டக்கலை மற்றும் விவசாயச் சுற்றுலா கண்காட்சியில் (MAHA) பங்கேற்கும் சுமார் 2,000 உள்ளூர் விவசாய உணவு உற்பத்தியாளர்கள், நாட்டின் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுப்படுத்துவதற்காக 40 அனைத்துலக கொள்முதல் தரப்புகளுடன் இணைக்கப்பட உள்ளனர்.

'ஹோஸ்டட் பையர்' (Hosted Buyer) திட்டத்தின் மூலமாக இந்த முயற்சி செப்டம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை, இங்குள்ள மலேசிய விவசாய கண்காட்சிப் பூங்காவில் (MAEPS) 'மகா வர்த்தக நாட்கள்' (MAHA Trade Days) நிகழ்ச்சியின் போது நடைபெறும் என விவசாயம் - உணவுப் பாதுகாப்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ இஷாம் இஷாக் தெரிவித்தார்.

"அடையாளம் காணப்பட்ட அனைத்துலக கொள்முதல் தரப்பினர், ஏற்றுமதிக்குத் தயாராக உள்ள தயாரிப்புகளைக் கொண்ட உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட வணிகப் பொருத்த அமர்வுகள் மூலம் இணைக்கப்படுவார்கள்," என்று இன்று இங்கு நடைபெற்ற MAHA 2026 செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

உள்ளூர் தொழில்முனைவோரை அனைத்துலக கொள்முதல் தரப்புடனும், தொழில்துறை தரப்புடனும் இணைக்கும் ஒரு வர்த்தக தளமாக MAHA 2026-ஐ மாற்றுவதற்கான முயற்சிகளில் இந்தத் திட்டமும் ஒன்று என்று இஷாம் கூறினார்.

இந்த வணிகப் பொருத்த அமர்வுகளின் மூலம் கிடைக்கும் பொருளாதார தாக்கம் மற்றும் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான தரவுகளையும் அமைச்சு சேகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

'மகா கோ குளோபல்' (MAHA Go Global) பிரிவு 'கோ குளோபல், குரோவ் லோக்கல்' (Grow Local) என்ற அம்சங்களை உட்படுத்தியிருக்கும்.

இது அனைத்துலக அளவில் வணிக மயமாக்கக்கூடிய அதிக மதிப்புள்ள விவசாய உணவுப் பொருட்களில் கவனம் செலுத்தும்.

"உள்ளூர் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன், அனைத்துலகச் சந்தையின் தேவைகள், சான்றிதழ்கள் மற்றும் நுழைவு நிபந்தனைகளைப் புரிந்துகொள்ள தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் 'ஏற்றுமதி ஒரிட மையம்' (Export One-Stop Centre) அமைக்கப்படும்,"

என்று அவர் கூறினார்.

MAHA 2026 கண்காட்சியானது RM58 மில்லியன் நேரடி விற்பனையையும், RM8 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளையும் ஈர்க்க இலக்கு வைத்துள்ளதாக இஷாம் தெரிவித்தார்.

வருகையாளர்கள் இலக்கு குறித்து கருத்து தெரிவித்த இஷாம், இம்முறை 800,000 இளைஞர்கள் உட்பட மொத்தம் நான்கு மில்லியன் வருகையாளர்களை ஈர்க்க இலக்கு வைத்துள்ளதாகக் கூறினார்.

விவசாயத் துறையை ஒரு லாபகரமான தொழிலாக இளைஞர்கள் தேர்ந்தெடுப்பதற்கான ஆர்வத்தை இது தூண்டும் என நம்பப்படுகிறது.

அக்ரோ சவாரி (Agro Safari), கிட்ஸ் வொண்டர்லேண்ட் (Kids Wonderland), ஸ்மார்ட் விவசாயத் திடல் (Laman Smart Farming), மிதக்கும் சந்தை (Floating Market), மகா சில்லாக்ஸ் மண்டலம் (MAHA Chillax Zone) மற்றும் ரேவாங் வாரிசான் (Rewang Warisan) போன்ற பல்வேறு புதிய அம்சங்களுக்கும் இந்த கண்காட்சியின் போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ட்ரோன்களை பறக்க விடுதல் மற்றும் பட்டாசு வெடிப்பு போன்றவை முக்கிய ஈர்ப்புகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.