பெட்டாலிங் ஜெயா: நாட்டின் ஆரோன் சியா - சோ வூய் யிக் இணையினர், நடப்பு உலக வெற்றியாளர்களும் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜோடியைத் தோற்கடித்து, உலகப் பூப்பந்து இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாகத் தகுதி பெற்று மலேசிய பூப்பந்து வரலாற்றில் முத்திரை பதித்துள்ளனர்.
புதுடில்லி, இந்திரா காந்தி உள்ளரங்கில் 43 நிமிடங்கள் நீடித்த இந்த அரையிறுதி ஆட்டத்தில், ஆரோன் - வூய் யிக் ஜோடியினர் தென்கொரியாவின் கிம் வொன் ஹோ - சோ சியுங் ஜே இணையினரை 21-17, 21-18 என்ற நேர் செட்களில் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இரு இணைகளுக்கும் இடையிலான நேருக்கு நேர் மோதல் கணக்கு இப்போது கொரியர்களுக்கு சாதகமாக 3-2 என உள்ளது.
உலக வெற்றியாளர் இறுதிப்போட்டிக்கு இரு முறை தகுதி பெற்ற முதல் மலேசிய இணை என்ற பெருமையை ஆரோன் - வூய் யிக் ஜோடியினர் பெற்றுள்ளனர்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில், அவர்கள் சீனாவின் முன்னணி இணையான லியாங் வெய் கெங் - வாங் சாங் ஜோடியை எதிர்கொள்வர்.
ஆரோன் - வூய் யிக் இணையினர் கடந்த 2022-ஆம் ஆண்டில் மலேசியாவின் முதல் ஆண்கள் இரட்டையர் உலக வெற்றியாளர்களாக வரலாறு படைத்ததுடன், அதற்கு அடுத்த ஆண்டு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
தற்போது அவர்கள் தங்களது மூன்றாவது பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
உலக வெற்றியாளர் போட்டியில் நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்ற புகழ்பெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டக்காரர் லீ சோங் வெய்-க்கு அடுத்தபடியாக இவர்கள் இந்த சாதனையை எட்டியுள்ளனர்.
உலக வெற்றியாளர் போட்டிக்கு பரிசுத் தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை என்றாலும், வெற்றி பெறுபவருக்கு உலக வெற்றியாளர் என்ற பட்டமும், டிசம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள உலக இறுதி தொடர் (World Tour Finals) போட்டிக்குத் தேவையான தரவரிசைப் புள்ளிகளும் வழங்கப்படும்.
தற்போது உலக இறுதி தொடர் தரவரிசையில் ஆரோன் - வூய் யிக் ஜோடியினர் 10-வது இடத்தில் உள்ளனர்.
இந்த இறுதிப் போட்டிக்கு முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் இணைகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.




