கோலாலம்பூர், ஆகஸ்ட் 20: கோலாலம்பூரில் அண்மையில் இடைநிலைப்பள்ளி மாணவி ஒருவர் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக, கல்வி அமைச்சு அதன் உள்விசாரணையை உடனடியாக முடிக்குமாறு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான பொறுப்பு, பள்ளி ஆய்வாளர் குழு, மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச கல்வித் துறை ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பகடிவதை மற்றும் இனவாதக் கூறுகள் உள்ளிட்ட பொதுமக்களின் கவலைக்குரிய அனைத்து விஷயங்களும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், உண்மைகள் மற்றும் சரியான நடைமுறைகளின் அடிப்படையில் அவை உடனடியாகக் கையாளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தை விரிவான முறையில் கையாளுவதை உறுதி செய்வதற்காக, கல்வி அமைச்சு போலிசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
மேலும், சமூக நலத்துறை மற்றும் சுகாதார அமைச்சுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது," எனவும் ஃபட்லீனா தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த பள்ளி சமூகத்திற்கும் தகுந்த கவனமும் ஆதரவும் வழங்கப்பட்டு வருவதாக ஃபத்லினா கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கல்வி அமைச்சின் ஆலோசகர் குழுவினால் உளவியல் ரீதியான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், ஆசிரியர்களுக்கு தற்போது நடந்து வரும் விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நலன் மற்றும் மன அமைதிக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, தலைநகரில் இடைநிலைப் பள்ளி மாணவி ஒருவர் மரணமடைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியில் பகடிவதை மற்றும் இனவாத கூறுகள் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது .




