
செர்டாங், ஆகஸ்ட் 19: சுக்மா 2026-இல், முதல் முறையாக களமிறங்கிய சிலாங்கூர் இளம் ஓட்டப்பந்தய வீராங்கனை ஷயாத்திரி ரத்னம், பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
புத்ரா மலேசியா பல்கலைகழகத்தின் (UPM) விளையாட்டரங்கில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 16 வயதான ஷயாத்திரி 25 சுற்றுகளை நிறைவு செய்து 41 நிமிடங்கள் 30.790 விநாடிகளில் இலக்கைக் கடந்தார்.

இந்த நேரப் பதிவு அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாக அமைந்ததுள்ளது.
இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தை கூட்டரசுப் பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனை கைப்பற்றிய நிலையில், சபா பிரதிநிதி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஷயாத்திரியின் இந்த வெற்றி, இளம் வயதிலேயே அவர் கொண்டுள்ள திறமையையும் எதிர்கால ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ளது.
அவரது பயிற்சியாளர்களான நரிந்தர் சிங் மற்றும் அருள் தேவர் ஆகியோரும் ஷயாத்திரியின் சாதனையைப் பாராட்டியதுடன், இது அவரது விளையாட்டு வாழ்க்கையில் சிறப்பான தொடக்கமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.





