
சுபாங் ஜெயா, ஆகஸ்ட் 18: சுக்மா 2026 ஆண்கள் கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில், சிலாங்கூர் அணி கெடா அணியிடம் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டது.
செர்டாங் ஜெயாவில் உள்ள சுபாங் ஜெயா நகராண்மைக் கழக மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஆட்டத்தில் சிலாங்கூர் அணி வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி கொள்ள நேரிட்டது.
ஆட்டத்தின் இறுதி நிமிடங்கள் வரை இரு அணிகளும் சமபலத்துடன் கடுமையாக மோதிய நிலையில், சிலாங்கூர் வீரர்கள் செய்த சில சிறிய தவறுகள் கெடா அணிக்குச் சாதகமாக அமைந்து வெற்றியைத் தேடித் தந்தது.

தங்களது வீரர்கள் சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்தினர் என்றும், ஆனால் ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஏற்பட்ட பதற்றமும் அழுத்தமுமே முக்கியப் புள்ளிகளை இழக்கக் காரணமாக அமைந்தது என்றும் சிலாங்கூர் அணியின் பயிற்சியாளர் தியாகு சங்கரன் வருத்தத்துடன் தெரிவித்தார்.

கடந்த 2024 சரவாக் சுக்மா போட்டியில் சிலாங்கூர் ஆடவர், மகளிர் ஆகிய இரு அணிகளுமே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தங்கத்தை இழந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த நிலையில், இம்முறை மகளிர் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது தங்களுக்குப் பெரும் ஆறுதல் அளிப்பதாக அவர் குறிப்பிடிருந்தார்.
மேலும், வயது வரம்பைக் கடந்த வீரர்களுக்குப் பதிலாகப் புதிய திறமையாளர்களைக் கண்டறிந்து, அடுத்த சுக்மா போட்டியில் இரு பிரிவுகளிலும் தங்கம் வெல்வதே தங்களின் அடுத்த இலக்கு என்றும் பயிற்சியாளர் தியாகு தெரிவித்தார்.

இதற்கிடையே, சிலாங்கூர் மாநிலக் குழுவின் தலைவர் அப்பாஸ் அத்மி சலிம்மி, ஆண்கள் கபடி அணிக்குத் தங்கம் நழுவியிருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளியுடன் இறுதிப் போட்டி வரை முன்னேறிய கபடி குழுவினரின் அசாத்திய உழைப்பிற்குத் தனது பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.







