ஷா ஆலாம், ஆகஸ்ட் 18- '2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
அத்திட்டத்தில் மக்களின் நலனை மையமாகக் கொண்டு 10 முக்கிய இலக்குகள் வகுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐந்தாவது மடானி வரவு செலவுத் திட்டமாக அமையவிருக்கும் 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவது, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்வது ஆகிய மூன்று முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அந்த 10 முக்கிய இலக்குகளின் விவரம் பின்வருமாறு:
மக்களுக்கான சமூக நீதியும் சம மேம்பாடும்
வாழ்க்கைச் செலவின அழுத்தத்திலிருந்து மக்களைப் பாதுகாத்தல்
மக்களுக்கான மானியங்கள் மற்றும் சமூக உதவிகளை மேம்படுத்துதல்
கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படைச் சேவைகள்
செலவினமும் மக்களுக்கு நேரடிப் பலன் தருவதை உறுதி செய்வதோடு, நிதி விரயங்கள் மற்றும் கசிவுகளை முற்றிலுமாகக் குறைத்தல்
அரசு நிர்வாகம் மற்றும் சேவைத் தரம்
தொழிலாளர் நலன் மற்றும் கௌரவமான ஊதியம்
உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் 'மலேசியத் தயாரிப்பு'
உயர் மதிப்புமிக்க முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள்
ஆற்றல், உணவு, காலநிலை மற்றும் இணைய பாதுகாப்பு
இந்த 10 முக்கிய இலக்குகள் குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காக நிதி அமைச்சின் அதிகாரப்பூர்வ வரவு செலவுத் திட்ட வலைத்தளம் (https://belanjawan.mof.gov.my) இன்று (ஆகஸ்ட் 18) முதல் திறக்கப்பட்டுள்ளது.




