
செர்டாங், ஆகஸ்ட் 18: மலேசியாவின் கடுமையான வெப்பத்தையும் தாண்டி, சிலாங்கூர் மாநில ஓட்டப்பந்தய வீராங்கனை ஜெருஷா ஆலிவ் ஜேசன், மகளிர் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தை வாகை சூடினார்.
இன்று UPM-மலேசிய புத்ரா பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற 2026 சுக்மா போட்டியில் அவர் தனது தடத்தைப் பதிவுச் செய்தார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் தனது உயர்கல்வியைத் தொடரும் ஜெருஷா, பந்தய தூரத்தை 4 நிமிடங்கள் 59.100 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

கூட்டரசு பிரதேசம் மற்றும் ஜொகூர் மாநில வீராங்கனைகள் முறையே முதல் இரு இடங்களைப் பிடித்தனர்.
ஆஸ்திரேலியாவின் குளிர்ந்த காலநிலையில் பயிற்சி பெற்ற பிறகு, மலேசியாவின் கடுமையான வெப்பநிலைக்கு ஏற்ப தனது உடலைத் தயார்படுத்த சிறிது காலம் தேவைப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், அந்த சவால்களையும் தாண்டி சிலாங்கூர் மாநிலத்திற்காகப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற தனது இலக்கை அவர் எட்டினார்.
"ஆஸ்திரேலியாவில் இருந்து சுக்மா போட்டிக்காக மலேசியா திரும்பியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த வெயிலுக்குஎனது உடல் பழக வேண்டியிருந்தாலும், நானும் ஒரு மலேசியர் என்பதால் இந்த வானிலை எனக்குப் பழகிய ஒன்றுதான்" என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் பெருமிதத்துடன் கூறினார்.

இதற்கிடையே, ஆண்கள் பிரிவிற்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிலாங்கூர் வீரர்கள் பதக்க மேடையை அலங்கரிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டனர்.
இதன் மூலம், தடகளப் போட்டிகளின் மூன்றாவது நாளில் சிலாங்கூர் மாநிலம் மகளிர் 200 மீட்டர் பிரிவில் ஒரு வெள்ளியையும், 1,500 மீட்டர் பிரிவில் ஒரு வெண்கலத்தையும் தன்வசப்படுத்தியது.







