
ஷா ஆலாம், ஆகஸ்ட் 18 - சிலாங்கூர் மகளிர் கபடி அணி 2026 சுக்மா போட்டியில் தங்கம் வென்றது.
செர்டாங் ஜெயாவில் உள்ள சுபாங் ஜெயா நகராண்மைக் கழக அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், சிலாங்கூர் மகளிர் கபடி அணி, கூட்டரசு பிரதேச அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பு நிறைந்த அவ்வாட்டத்தில் சிலாங்கூர் அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் கூட்டரசு பிரதேசத்தை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் சிலாங்கூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னிலை பெற்றது.
குறிப்பாக, சிலாங்கூர் அணியின் வீராங்கனை ஏ. துர்காஸ்ரீ அடுத்தடுத்து புள்ளிகளைக் குவித்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார்.

இருப்பினும், ஆட்டத்தின் பிற்பாதியில் கூட்டரசு பிரதேச அணி மிகச்சிறப்பாக விளையாடி புள்ளிகளின் வித்தியாசத்தைக் குறைத்தது.
இறுதி நிமிடங்களில் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் மாறிய நிலையில், சிலாங்கூர் அணி தங்களின் சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் 34-33 என்ற கணக்கில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தது.
இந்த வெற்றியின் மூலம், கடந்த ஈராண்டுகளுக்கு முன்பு சரவாக்கில் நடைபெற்ற சுக்மா போட்டியில் கூட்டரசு பிரதேசத்திடம் இழந்த தங்கப் பதக்கத்தை சிலாங்கூர் அணி மீண்டும் தன்வசப்படுத்தியது.
இந்த வரலாற்று வெற்றி குறித்து சிலாங்கூர் அணியின் கேப்டன் பி. சங்கரி கூறுகையில், இந்த தங்கப் பதக்கத்தை வெல்வதற்காகத் தங்கள் அணி கடந்த 11 மாதங்களாகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
ஆட்டத்தின் இறுதியில் எதிரணி கடுமையான சவாலை அளித்தபோதிலும், வீராங்கனைகளின் ஒழுக்கத்தையும் மன அமைதியையும் சரியாகக் கையாண்டதே வெற்றிக்குக் காரணம் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், மூன்றாவது இடத்திற்கான வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் பேராக் அணி 36-25 என்ற புள்ளி கணக்கில் திரங்கானு அணியைத் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தியது.
கடந்த 2024 சுக்மா போட்டியில் கூட்டரசு பிரதேச அணி ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.








