ஷா ஆலாம், ஆகஸ்ட் 16 - 'ரோபோடிக்ஸ்' துறை தற்போது வெறும் கோடிங் மற்றும் புரோகிராமிங் -குடன் மட்டும் நின்றுவிடவில்லை. மாறாக தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சிக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு (AI) சவால்களையும் எதிர்கொண்டு வருவதாக இஸ்லாம் மற்றும் புத்தாக்க துறைக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் ஃபஹ்மி ஙா தெரிவித்தார்.
"கண்டுபிடிப்புகளும் புதுமைகளும் இப்போது வெறும் விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு கட்டாயத் தேவையாக மாறிவிட்டது. புதுமைகள் இல்லை என்றால் நாம் அழிந்துவிடுவோம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

"நான் சீனாவுக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ரோபோ தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததை நினைவுகூர்கிறேன். அவர்கள் வெறும் ரோபோக்களை உருவாக்குவதுடன் நிற்காமல், அவற்றுக்கான புரோகிராமிங்கையும் செய்தார்கள்," என்று இன்று இங்கு நடைபெற்ற பிகேஎன்எஸ் ரோபோடிக்ஸ் சவால் (PKNS Robotics Challenge) போட்டியின் போது ஆற்றிய உரையில் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (PKNS) கண்டுபிடிப்புப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டியில் சிலாங்கூரில் உள்ள 12 இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 48 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் 'பேட்டில் சாக்கர்பாட் சேலஞ்ச்' (Battle Soccerbot Challenge) என்றப் பிரிவு இடம்பெற்றது.
இது ஆட்டோமேஷன், புரோகிராமிங் மற்றும் 3D-பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரோபோக்களை வடிவமைத்தல், உருவாக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் மாணவர்களின் திறனை சோதித்தது.
இப்போட்டியில் லா சால் இடைநிலைப் பள்ளி (SMK La Salle) மாணவர்கள் வெற்றிப் பெற்றனர்.
செக்க்ஷன் 9 இடைநிலைப் பள்ளி(SMK Seksyen 9) இரண்டாவது இடத்தைப் பிடித்தது.








