ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 15 – இந்தோனேசியாவின் வட சுமத்ரா பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட ரிக்டர் 6.4 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாகப் பினாங்கு மாநிலத்தின் பல பகுதிகளில் லேசான நடுக்கம் உணரப்பட்டது.
இது தொடர்பாகத் தீயணைப்பு, மீட்புத் துறைக்கு இதுவரை ஐந்து புகார்கள் வந்தன.
பினாங்கு தீவுப்பகுதியில் இருந்து நான்கும், நிலப்பகுதியிலிருந்து (Mainland) ஒரு புகாரும் என மொத்தம் ஐந்து நடுக்கப் புகார்கள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியது.
இந்த நிலநடுக்கம் இன்று மாலை 6:54 மணியளவில் வட சுமத்ராவின் பெமாதாங்சியாந்தார் (Pematangsiantar) நகரிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 154 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
"புகார்கள் வந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்தந்த இடங்களுக்கு விரைந்து அனுப்பப்பட்டனர். எனினும், பினாங்கில் இதுவரை எந்தவொரு காயங்களோ , சொத்துச் சேதங்களோ பதிவாகவில்லை" என பினாங்கு தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டுத் துணை இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ் கூறினார்.
பினாங்கு தீவின் பாலிக் புலாவ், பத்து ஃபெரிங்கி, தஞ்சோங் தோகோங், பாயான் லெப்பாஸ், ஆயர் ஈத்தாம், ஜெலுத்தோங் மற்றும் நிலப்பகுதியின் புக்கிட் மெர்தாஜாம், பட்டர்வொர்த் உள்ளிட்ட பல இடங்களில் நடுக்கத்தை உணர்ந்ததாகப் பொதுமக்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தமான் தீவுப்பகுதியில் வீடுகளில் இருந்த விளக்குகள் ஆடிய காட்சிகளையும் சிலர் காணொளியாகப் பகிர்ந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக மலேசியாவின் தீபகற்ப மேற்கு கடற்கரைப் பகுதிகளில் நடுக்கம் உணரப்பட்ட போதிலும், மலேசியாவிற்கு சுனாமி அலைகளின் அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியது.




