ஜகார்த்தா, ஆகஸ்ட் 15 – இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளால் குறைந்தபட்சம் 38 பேர் உயிரிழந்தனர்.
நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள இடங்களைச் சென்றடைய மீட்புக்குழுவினர் தற்போது தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இந்த பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவின் பல பகுதிகளில் 1 மீட்டருக்கும் (3 அடி) குறைவான உயரத்தில் சுனாமி அலைகள் பதிவாகின.
பின்னர், நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டது.
"பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி, 38 பேர் உயிரிழந்ததனர், 2 பேர் படுகாயமடைந்தனர்,
மேலும் 11 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்" என தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பின் தலைவர் சுஹர்யான்டோ செய்தியாளர் கூட்டத்தின் போது தெரிவித்தார்.
முன்னதாக, புளோரஸ் தீவின் (Flores Island) முக்கிய நகரமான மவுமேரேவில் (Maumere) உள்ள ஒரு துறைமுகப் பகுதியில் மீட்புக்குழுவினர் 20 உடல்களை மீட்டனர்.
மேலும் 6 பேர் காயமடைந்த நிலையில், 2 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததாக அந்நகர மீட்புத் துறையின் தலைவர் ஃபதூர் ரஹ்மான் தெரிவித்தார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பல கட்டடங்களுக்குள் பொதுமக்கள் இன்னும் சிக்கியிருப்பதாகவும், நிலச்சரிவு காரணமாகப் பல முக்கியச் சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் சுஹர்யான்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.




