RM200 விலையில் செப்பாங் F1 'மடானி டிக்கெட்'

15 ஆகஸ்ட் 2026, 7:02 AM
RM200 விலையில் செப்பாங் F1 'மடானி டிக்கெட்'

ஷா ஆலாம், ஆகஸ்ட் 15 - F1 கார் பந்தயத்தைக் காண, 'மடானி டிக்கெட்' (Tiket MADANI) என்ற பெயரில் RM200 ரிங்கிட் ஆரம்ப விலையில் நுழைவுச் சீட்டுகள் விற்கப்படுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

குறிப்பாக மைகார்ட் வைத்திருப்பவர்களுக்கான இந்தச் சலுகை , செப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்தில் நடைபெறவிருக்கும் ஃபார்முலா 1 (F1) பந்தயத்தை மலேசியர்கள் அனைவரும் நேரில் கண்டு ரசிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்தச் சிறப்பு விலை, மூன்று நாட்களுக்கு நடைபெறும் முழு பந்தயத்துக்கான அனுமதியையும் உள்ளடக்கியது என பிரதமர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் 2 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 'ஃபார்முலா 1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்' பந்தயம், மலேசியா - பஹ்ரைன் இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் செப்பாங் பந்தயத் தளத்தில் நடத்தப்படுகிறது.

இப்பந்தயம் கடந்த ஏப்ரல் மாதமே பஹ்ரைனில் நடந்திருக்க வேண்டும், ஆனால் மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் அரசியல் பதற்றமான சூழ்நிலை காரணமாக இப்பந்தயம் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது மலேசியாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

அதிகரித்து வந்த செலவினங்கள் மற்றும் உரிமக் கட்டணங்கள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டோடு மலேசியாவில் ஃபார்முலா 1 பந்தயங்கள் நிறுத்தப்பட்டன.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்த விறுவிறுப்பான பந்தயம் செப்பாங் களத்திற்குத் திரும்புவதால், அதிகமான மலேசியர்கள் இதனை நேரில் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மடானி டிக்கெட் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த டிக்கெட் விற்பனை மற்றும் கூடுதல் விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை செப்பாங் அனைத்துலக பந்தயத் தள நிர்வாகம் (SIC) மிக விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.