சுக்மா தேக்வாண்டோ : சிலாங்கூருக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தார் நூர் ஐனா

14 ஆகஸ்ட் 2026, 1:29 PM
சுக்மா தேக்வாண்டோ :  சிலாங்கூருக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தார் நூர் ஐனா

ஷா ஆலம், ஆகஸ்ட் 14: இன்று நடைபெற்ற சுக்மா போட்டியில், பெண்களுக்கான 46 கிலோகிராமுக்கு உட்பட்ட பிரிவின் தேக்வாண்டோ இறுதிப் போட்டியில், சிலாங்கூர் வீராங்கனை நூர் ஐனா கிஸ்தினா நோர் மஸ்னிசார் (Nur Aina Qistina Nor Maznizar) நெகிரி செம்பிலான் வீராங்கனையை வீழ்த்தி உபசரணை மாநிலமான சிலாங்கூருக்கு தங்கப் பதக்கத்தைப் பரிசாக அளித்தார்.

ஷா ஆலம் ஐடிசிசி (IDCC Shah Alam) வளாகத்தில் நடைபெற்ற இந்த இறுதிக் களத்தில், 16 வயதே ஆன நூர் ஐனா, நெகிரி செம்பிலான் பிரதிநிதி மாரியம் அலிடெலிஷா அஃபியா முகமது ஆடமை (Marieam Adlydelisha Afea Mohamad Adam) எதிர்கொண்டார்.

போட்டியின் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய சிலாங்கூர் வீராங்கனை, இரண்டு சுற்றுகளையும் தன்வசப்படுத்தி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

முதல் சுற்றில் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்று தங்கப் பதக்கத்திற்கான வாய்ப்பை நூர் ஐனா பிரகாசப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் தனது ஆட்டத்தை மேலும் தீவிரப்படுத்திய அவர், மாரியம் அலிடெலிஷாவின் 11 புள்ளிகளுக்கு எதிராக 28 புள்ளிகளைக் குவித்து மிரட்டினார்.

இரண்டு சுற்றுகளிலும் காட்டிய இந்த ஆதிக்கத்தின் மூலம் அவர் பெண்களுக்கான 46 கிலோகிராமுக்கு உட்பட்ட பிரிவில் வெற்றியாளராக உருவெடுத்தார்.

தனது 16-ஆவது வயதிலேயே சுக்மா போன்ற ஒரு பெரிய விளையாட்டு மேடையில் தங்கப் பதக்கம் வென்றிருப்பது நூர் ஐனாவின் இந்த வெற்றிக்கு கூடுதல் பெருமை சேர்த்துள்ளது.

இந்த இளம் வீராங்கனையின் வெற்றி, சிலாங்கூர் மாநிலத்தின் பதக்கப் பட்டியலை உயர்த்தியிருக்கிறது.

நூர் ஐனாவின் இந்த வெற்றியையும் சேர்த்து, சிலாங்கூர் அணி இதுவரை 4 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களுடன் மொத்தம் 7 பதக்கங்களைக் குவித்துள்ளது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.