சுக்மா 2026 : புதிய விளையாட்டு நட்சத்திரங்கள் உருவெடுக்கும் களம்

14 ஆகஸ்ட் 2026, 2:07 AM
சுக்மா  2026 : புதிய விளையாட்டு நட்சத்திரங்கள் உருவெடுக்கும் களம்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 14 - அண்மையில் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் போட்டி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உள்ளூர் விளையாட்டு ரசிகர்களின் கவனம் தற்போது ஆகஸ்ட் 15 முதல் 24 வரை சிலாங்கூரில் நடைபெறவுள்ள 2026 சுக்மா- மலேசிய விளையாட்டுப் போட்டியின் பக்கம் திரும்பியுள்ளது.

37 விளையாட்டுப் பிரிவுகளில் இருந்து 468 தங்கப் பதக்கங்கள் 5,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களின் இலக்காக இருப்பது மட்டுமல்லாமல், தேசிய - அனைத்துலக அளவில் சாதனை படைக்கக்கூடிய இளம் விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து, வளர்த்து, உருவாக்குவதில் SUKMA-வின் பாரம்பரியம் தொடர்கிறது.

உபசரணை மாநிலம் என்ற முறையில், இந்தச் சூழ்நிலை சிலாங்கூருக்கு சாதகமாக இருப்பது மட்டுமின்றி, உள்ளூர் ஆதரவாளர்களின் பலத்த கரவொலியும் உற்சாகமும் வெற்றியை நோக்கி முன்னேற அவர்களுக்குப் பெரும் ஊக்கமாக அமையும்.

838 விளையாட்டு வீரர்கள் மற்றும் 191 குழு அதிகாரிகள் என மொத்தம் 1,029 பேரைக் கொண்ட சிலாங்கூர் குழு, தாங்கள் பங்கேற்கும் அனைத்து விளையாட்டுகளிலிருந்தும் குறைந்தது 80 தங்கப் பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளது.

இருப்பினும், 75 தங்கப் பதக்கங்களை இலக்காகக் கொண்டுள்ள நான்கு முறை வெற்றியாளரான சரவாக்கின் திறமையைச் சிலாங்கூர் குறைத்து மதிப்பிட முடியாது.

அதுமட்டுமின்றி, இரு முறை வெற்றியாளரான கூட்டரசு பிரதேசமும் மொத்தம் 180 பதக்கங்களை இலக்காகக் கொண்டு, இந்த SUKMA போட்டியில் முதல் மூன்று இடங்களுக்குள் வர கடுமையான சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில், SUKMA 2026 நாட்டின் எதிர்கால விளையாட்டு நட்சத்திரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவுள்ளது.

அவர்களில், 2025 தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற டேனிஷ் இஃப்திகார் முஹம்மது ரோஸ்லி (Danish Iftikhar Muhammad Roslee) முதன்மையானவர் ஆவார். சிலாங்கூரில் நடைபெறும் இந்த முக்கியப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதற்காக ஜோகூர் மாநிலத்தின் முதன்மை நம்பிக்கையாக இவர் திகழ்கிறார்.

கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய 23 வயதுக்குட்பட்டோருக்கான தடகள வெற்றியாளர் போட்டியில், ஆண்களுக்கான 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் நான்காவது இடத்தைப் பிடித்த திராங்கானுவைச் சேர்ந்த முகமது அர்மின் ஜஹ்ரில் அப்துல் லத்தீப் (Mohamad Armin Zahryl Abd Latif), இப்போட்டியில் வெற்றி பெறக்கூடிய முக்கிய வீரராகக் கருதப்படுகிறார்.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் பொது போட்டியில் வென்ற முகமது அர்மின், அதே போட்டியின் முதல் சுற்றில் 13.63 வினாடிகளில் இலக்கை எட்டி சாதனை படைத்தார்

இதன் மூலம், 2017-ஆம் ஆண்டில் ராய்சாம் ஷா வான் சோஃபியான் (Rayzam Shah Wan Sofian) படைத்திருந்த 13.67 வினாடிகள் என்ற தேசிய சாதனையை முறியடித்து அவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.

டென்பின் பௌலிங் (Tenpin Bowling) விளையாட்டில், சரவாக்கைச் சேர்ந்த ஈதன் டேமியன் கோ (Ethan Damien Goh) மற்றும் சிலாங்கூர் பிரதிநிதி முகமது அய்மான் ஷாஹின் சுலைமான் (Muhammad Aiman Syahin Sulaiman) ஆகியோர் தங்கள் மாநிலக் குழுக்கள் தங்கப் பதக்கத்தைக் கொண்டு வருதவற்கான முக்கியப் பலமாக விளங்குகின்றனர்.

இவர்கள் இருவரும் கடந்த மாதம் கூச்சிங்கில் நடைபெற்ற 2026 உலக இளையோர் பௌலிங் சாம்பியன்ஷிப் போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தேசிய அணியின் ஒரு பகுதியினர் ஆவர்.

டிரினிடாட் மற்றும் டொபாகோவில் நடைபெற்ற 2023 காமன்வெல்த் இளையோர் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை (Butterfly) நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற கோ லி ஹென் (Goh Li Hen) மூலம் சிலாங்கூர் மாநிலம் இந்த முறையும் தங்கப் பதக்கத்தை அறுவடை செய்யும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையில், பினாங்கைச் சேர்ந்த ட்ராக் சைக்கிள் பந்தய வீராங்கனை நூர் உமைரா குஹைசரா சுல்பிகா ரசாக் (Nur Umairah Qhaisara Zulfikha Razak), பெண்களுக்கான ஸ்பிரிண்ட் (Sprint) பிரிவில் உலக இளையோர் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

முறையான மற்றும் தீவிரமான ஏற்பாடுகளுடன், SUKMA சிலாங்கூர் 2026 போட்டி களம் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கும். இதில் நாட்டின் பெயரை உலக அரங்கில் உயர்த்தப்போகும் புதிய நட்சத்திரங்களின் பிறப்பிடமாக இந்த மேடை அமையுமா என்ற எதிர்பார்ப்பும் அடங்கும்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.