
ஷா ஆலாம், 13 ஆகஸ்ட்: சுக்மா மலேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் வயது வரம்பை தற்போதைய 21 வயதிலிருந்து 18 வயதாகக் குறைக்க வேண்டும் என்று விளையாட்டு ஆய்வாளர் பரிந்துரைத்துள்ளார்.
வளர்ந்த நாடுகள் இளம் வயதிலேயே திறமைகளை வளர்த்து வரும் நிலையில், உலக அரங்கில் சாதனைகளை அடைவதற்கு 21 வயது என்பது மிகவும் தாமதமானது என்று டத்தோ டாக்டர் பெக்கான் ரம்லி குறிப்பிட்டார்.
சுக்மா விளையாட்டுப் போட்டியை மறுசீரமைக்கும் முயற்சி தொடருமேயானால், அதில் விளையாட்டு வீரர்களின் பங்கேற்புக்கான வயதுத் தகுதியை மறுபரிசீலனை செய்யுமாறு இளைஞர், விளையாட்டு அமைச்சிடம் அவர் பரிந்துரைத்தார்.

"தற்போது வயது வரம்பு 21 ஆக உள்ளது, இதனை 18 வயதாகக் குறைக்கலாம். ஏனெனில், ஓர் அனைத்துலக விளையாட்டு வீரராக உருவெடுக்க, அவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் பயிற்சியளிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டும்.
சீனா போன்ற வளர்ந்த நாடுகளில் இதுதான் செய்யப்படுகிறது. அவர்கள் விளையாட்டு வீரர்களை உருவாக்க சிறு பிள்ளையாக இருக்கும் போதிலிருந்தே பயிற்சியைத் தொடங்கி விடுகிறார்கள்; எனவே 21 வயது என்பது மிகவும் தாமதமானது," என்று மீடியா சிலாங்கூரிடம் அவர் தெரிவித்தார்.
தற்போது, சுக்மா போட்டிகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு 21 மற்றும் அதற்கு உட்பட்டதாகும். எனினும், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற சில போட்டிகளுக்கு மட்டும் 15 வயது என்ற குறைந்த வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுக்மா போட்டிக்குப் பிறகு பெரிய அளவில் ஜொலிக்காத விளையாட்டு வீரர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான வசதிகள், பொதுத்துறையில் வேலைவாய்ப்புகள் அல்லது சிறப்புத் திறன் பயிற்சி வகுப்புகள் போன்ற வடிவங்களில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் டாக்டர் பெக்கான் பரிந்துரைத்தார்.
மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UiTM) விளையாட்டு அறிவியல், பொழுதுபோக்குத் துறையின் மூத்த விரிவுரையாளரான அவர், இத்தகைய உதவிகள் விளையாட்டு வீரர்கள் கல்வியில் தங்கள் தொழில்முறைப் பாதையை உருவாக்க உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"அவர்களுக்குப் பயிற்சி வழங்குங்கள். அவர்கள் பயிற்சியாளர் உரிமத்தைப் பெறுவதற்கான படிப்புகளில் கலந்துகொள்வதன் மூலம், தங்கள் பாதையைப் பயிற்சியாளராகவும் மாற்றிக் கொள்ளலாம்," என்று அவர் மேலும் கூறினார்.
இதுவரை, தடகள வீரர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் (IPT) கல்வியைத் தொடர உதவுவதற்காக கூட்டரசு விளையாட்டு உதவித்தொகை திட்டம் (BSP) மற்றும் உயர் கல்வி அமைச்சின் உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
1987 முதல் 2023 வரை மொத்தம் 1,191 விளையாட்டு வீரர்கள் பிஎஸ்பி (BSP) திட்டத்தைப் பெற்றுள்ளனர்.
இந்தத் திட்டம் 1986- இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில், 2024 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட கேபிடி (KPT) அமைச்சரின் உதவித்தொகை, சிறந்த விளையாட்டு வீரர்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல உதவுகிறது.







