
ஷா ஆலம், ஆகஸ்ட் 8 — டாருல் ஏசான் நீர் விளையாட்டு மையத்தை (Darul Ehsan Aquatic Centre) மேம்படுத்தி புதுப்பித்திருக்கும் முயற்சி, தரமான பொது விளையாட்டு வசதிகளில் முதலீடு செய்வதில் சிலாங்கூர் மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டினை வெளிப்படுத்தியிருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.
இந்த முயற்சி ஒரு விளையாட்டு மையத்திற்கு புதிய பெயரையும் வடிவத்தையும் மட்டும் கொடுக்கவில்லை.
நீண்டகால அடிப்படையில் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பொது சொத்துகளில் தொடர்ந்து முதலீடு செய்யும் மாநில அரசின் கடப்பாட்டினைக் குறிக்கிறன்து.
விரிவான மேம்பாட்டுப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்ட டாருல் ஏசான் நீர்விளையாட்டு மையம், தற்போது விளையாட்டு வீரர்களின் பயிற்சித் தேவைகளையும், தேசிய , அனைத்துலக அளவிலான போட்டிகளை நடத்துவதற்கான தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு நவீன வசதியாக கம்பீரத்துடன காட்சியளிக்கின்றது.
அதே வேளையில், இது பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் உகந்த பொழுதுபோக்கு இடத்தையும் வழங்குகிறது என அமிரூடின் ஷாரி கூறினார்.

மேம்பாட்டுப் பணிகளின் போது, நீச்சல் குள வசதிகள், இயந்திரம் மற்றும் பம்பிங் (pumping) அமைப்புகள், பாதுகாப்பு அம்சங்கள், இயற்கையை ரசிக்கும்படியான நில எழிலமைப்பு, ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் செலுத்தப்பட்டன.
முன்னதாக மந்திரி பெசார், இன்று அம்மையத்தின் மறுபெயரிடும் விழாவில் பங்கேற்றார்.

2026 சுக்மா மலேசிய விளையாட்டு போட்டியையும் பாரா சுக்மா போட்டியையும் நடத்துவதற்கான சிலாங்கூர் மாநிலத்தின் ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, மாநில அரசு இந்த நீர்விளையாட்டு மையத்தை புதுப்பித்து மறுபெயரிட்டுள்ளது.
இம்மையத்தில் ஆகஸ்ட் 12 -ஆம் தேதி நீர் போலோ (water polo) போட்டி நடைபெறவுள்ளது.








