ஷா ஆலாம், ஆகஸ்ட் 3 : ஆசிரியர் ஒருவரின் மறைவைத் தொடர்ந்து, கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் நலன் மற்றும் மனநலனில் கல்வி அமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
பள்ளிக்கூட தரப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கவும், தற்போதைய நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்யவும் மலேசிய கல்வி தலைமை இயக்குநர் , டத்தோ டாக்டர் முகமட் அசாம் அகமட், நேற்று அப்பள்ளிக்கு நேரில் வருகை தந்தார்.
அந்த வருகையின் போது, முகமட் அசாம் பள்ளியின் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் தற்போதைய நிலவரங்களை அறியவும், செயல்படுத்தப்பட்டு வரும் ஆதரவு நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் ஒரு சந்திப்பை நடத்தினார்.
இந்த சந்திப்பில் சிலாங்கூர் மாநில கல்வித் துறை இயக்குநர் டத்தின் வான் நோர் ஆஷிகின் அபு காசிம், மாவட்ட கல்வி அலுவலக திட்டமிடல் மற்றும் நிர்வாக துறையின் துணை இயக்குநர் அப்துல் ரஹீம் காலித், உலு சிலாங்கூர் மாவட்ட கல்வி அதிகாரி சைனல் இஸ்மாயில் , கல்வி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மறைந்த ஆசிரியரின் குடும்பத்தினர் தொடர்ந்து வலிமையுடனும் மன உறுதியுடனும் இருக்க வேண்டும் என்றும், லடாங் கெர்லிங் தமிழ்ப்பள்ளி தரப்பினர் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், அக்கறையுடனும், அன்பான சூழலிலும் தங்கள் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்றும் கல்வி அமைச்சு நம்பிக்கை தெரிவித்தது.
முன்னதாக, உலு சிலாங்கூரில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர் அறையில், கடந்த வியாழக்கிழமை 30 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் இறந்து கிடந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.






