
ஷா ஆலாம், ஆகஸ்ட் 3: சுக்மா போட்டிக்காகப் பயன்படுத்தப்படும் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளில் தோராயமாக 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவை ஊராட்சி மன்றங்களுக்குச் சொந்தமானவை ஆகும். அவற்றின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஊராட்சி மன்றங்கள் 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன என்று சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் (MSN) அறிவித்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட இந்த வசதிகள் எதிர்காலத்திலும் உள்ளூர் சமூகத்தினருக்கும் விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டுக்கும் தொடர்ந்து பயனளிக்கும் என்பதால், இந்த முதலீடு எந்த வகையிலும் வீணாகாது என சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் நிர்வாக அதிகாரி முகமட் நிசாம் மர்ஜுகி கூறினார்.
சுக்மா போட்டிக்குப் பிறகு இந்த விளையாட்டு அரங்கங்களும் வசதிகளும் சுற்றுவட்டார மக்களால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று சுட்டிக்காட்டினார். எனவே, அவற்றுக்காகச் செய்யப்படும் மேம்பாட்டுச் செலவுகள் பொதுமக்களின் நிதியை வீணடிப்பதாக ஆலாது; எதிர்கால விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு அவை பெரிதும் பங்களிக்கும் என்றும் அவர் விளக்கினார்.
விளையாட்டுப் போட்டிகளுக்கான விரிவான மற்றும் முறையான வசதிகளை வழங்குவதற்குத் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் நிசாம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இதில் சில அரங்குகள் இப்போது அனைத்துலகத் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
சிலாங்கூரில் உள்ள ஒன்பது மாவட்டங்களில், 52 விளையாட்டு அரங்குகளில் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 24 வரை 22 ஆவது சுக்மா விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, பாரா சுக்மா (Para SUKMA) போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெற உள்ளன.







