ஷா ஆலாம், ஜூலை 27 - சுக்மா மலேசிய போட்டி விளையாட்டில் சிலாங்கூர் மாநிலம் ஒட்டுமொத்த வெற்றியாளராக உருவெடுத்தால், தங்கம் வெல்லும் சிலாங்கூர் வீரர்களுக்கு தலா 2,000 முதல் 5,000 ரிங்கிட் வரை கூடுதலாக வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.
"தனிநபர் முதல் மூன்று பேர் கொண்ட குழு போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதற்கு RM10,000 ஊக்கத்தொகையை நிர்ணயித்துள்ளோம்.நாம் ஒட்டுமொத்த வெற்றியாளரானால், அந்த தொகையை 15,000 ரிங்கிட்டாக உயர்த்துவேன்.
நான்கு முதல் 10 பேர் கொண்ட குழுக்களுக்கு, தங்கம் வெல்லும் ஒவ்வொரு நபருக்கும் 7,000 ரிங்கிட் நிர்ணயித்துள்ளோம். நாம் ஒட்டுமொத்த வெற்றியாளரானால், ஊக்கத்தொகை மதிப்பு ஒரு நபருக்கு 10,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.
10 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட போட்டிகளுக்கு, தங்கம் வென்றவருக்கு அல்லது முதலிடத்தைப் பிடித்தவருக்கு 5,000 ரிங்கிட் நிர்ணயித்துள்ளோம். ஆனால் நாம் ஒட்டுமொத்த வெற்றியாளரானால் வெகுமதியை ஒரு நபருக்கு 7,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்," என்று நேற்று சிலாங்கூர் குழுவிற்கான கொடி வழங்கும் விழாவிற்குப் பிறகு அமிருடின் ஷாரி செய்தியாளர்களிடம் பேசினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 'ரோட் டு சாம்பியன்' (Road to Champion) திட்டத் தொடக்க விழாவில், சிலாங்கூர் மாநிலம் ஒட்டுமொத்த சுக்மா வெற்றியாளராக உருவெடுத்தால், 12,000 ரிங்கிட் (தனிநபர் முதல் மூன்று பேர் கொண்ட குழுக்கள்), 7,000 ரிங்கிட் (நான்கு முதல் 10 பேர் கொண்ட குழுக்கள்) மற்றும் 5,000 ரிங்கிட் (10 பேருக்கு மேல் உள்ள குழுக்கள்) தங்கப் பதக்க ஊக்கத்தொகையாக சிலாங்கூர் அரசு வழங்கும் என்று அவர் கூறியிருந்தார்.
இம்முறை சுக்மா போட்டியில் 1,029 வீரர்களும் அதிகாரிகளும் சிலாங்கூரைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
பாரா சுக்மா போட்டியில் 258 வீரர்களும் அதிகாரிகளும் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
37 விளையாட்டுகளில் 469 போட்டிகளைக் கொண்ட 2026 சுக்மா போட்டிகள் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறும்.
அதே நேரத்தில் பாரா சுக்மா போட்டிகள் செப்டம்பர் 5 முதல் 14 வரை நடைபெறும்.
தொடக்க விழா ஷா ஆலாமில் உள்ள டத்தாரான் கெமர்டேக்காஹான் (Dataran Kemerdekaan) சதுக்கத்தில் நடைபெறும்.
நாட்டின் மிகப்பெரிய இந்த விளையாட்டுப் போட்டியில் அனைத்து மாநிலங்களின் குழுக்களும், விருந்தினராக புரூணையும் பங்கேற்கின்றன.








