நியூயார்க், ஜூலை 17 : 2026 ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு, வழக்கமான பாரம்பரிய கிண்ணம், தங்கப் பதக்கங்கள் ஆகியவற்றுடன் கூடுதலாக 'வெற்றியாளர் மோதிரமும்' (Championship Ring) வழங்கப்படும் என ஃபீஃபா வியாழக்கிழமை அறிவித்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நியூயார்க் நியூ ஜெர்சி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - அர்ஜென்டினா அணிகள் வெற்றி கிண்ணத்துக்காக மோதவுள்ளன.
இந்த போட்டி முடிந்த பிறகு வெற்றி பெறும் வெற்றியாளர் அணிக்கு இந்த மோதிரங்கள் பரிசளிக்கப்படும்.
இந்த வெற்றியாளர் மோதிரம், 2026 ஆம் ஆண்டு நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க காற்பந்து தொடரை நினைவுகூரும் வகையில், தனித்தனி எண்கள் இடப்பட்டு, 2,026 மோதிரங்கள் மட்டுமே கொண்ட ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பாக (Limited Edition) உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 30 மோதிரங்கள் வெற்றி பெறும் அணியின் வீரர்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 1,996 மோதிரங்கள் ஃபீஃபாவின் அதிகாரப்பூர்வ உரிமம் பெற்ற நினைவுப் பொருட்களாக (Memorabilia) உலகம் முழுவதும் வெளியிடப்படும்.
ஒவ்வொரு மோதிரத்தின் ஒரு பக்கத்தில் ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கத்தின் வடிவமைப்பு உலகக் கிண்ணத்தை வெல்லும் நாட்டின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும்.
அமெரிக்காவின் தொழில்முறை விளையாட்டுத் தொடர்களில் வெற்றியாளர் பட்டம் வெல்லும் அணிகளுக்கு கிண்ணத்துடன் நினைவு மோதிரங்களையும் வழங்கும் நீண்டகால பாரம்பரியத்தை இந்த சிறப்பு உலகக் கிண்ண மோதிரம் பிரதிபலிக்கிறது.- பெர்னாமா-சின்ஹுவா




