கோலா லங்காட், டிச 31- கோலா லங்காட், ஜென்ஜாரோம், சுங்கை ராம்பாய் சாலையில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் புதன்கிழமை அதிகாலை படுகாயமடைந்தார்.
கோலா லங்காட் மாவட்ட காவல் துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் அக்மல்ரிசல் ரட்ஸி கூறுகையில், புதன்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் சிவப்பு நிற யமஹா எல்சி 135 மோட்டார் சைக்கிள், கருப்பு நிற புரோட்டோன் சாட்ரியா கார் மற்றும் கருப்பு நிற டொயோட்டா வெல்ஃபயர் கார் ஆகிய மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்தது.
அவர் மேலும் கூறுகையில், ஆரம்பக்கட்ட விசாரணையில், ஜாலான் கெபூன் பகுதியிலிருந்து சுங்கை ராம்பாய் சாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த யமஹா எல்சி135 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், வழிவிடாமல் ஒரு சந்திப்பில் இருந்து வெளியே வந்தபோது, அதே சாலையில் நேராகச் சென்று கொண்டிருந்த புரோட்டோன் சாட்ரியா கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
மோதல் காரணமாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் தூக்கி வீசப்பட்டார். அதே நேரத்தில் புரோட்டோன் சாட்ரியா கார் சாலைத் தடுப்பை மோதி, பின்னர் சுழன்று எதிர் திசைப் பாதைக்குச் சென்று டொயோட்டா வெல்ஃபயர் காரின் முன்புறத்தில் மோதியது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு வலது மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட தாகவும், வலது காலில் காயம் ஏற்பட்டதாகவும், மேலதிக சிகிச்சைக்காக பந்திங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவருக்கு வலது கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவரது நிலை சீராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.புரோட்டோன் சாட்ரியா கார் ஓட்டுநருக்கும், டொயோட்டா வெல்ஃபயர் கார் ஓட்டுநருக்கும் இந்த சம்பவத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
யமஹா எல்சி135 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் 20 வயதுடைய சுயதொழில் புரியும் உள்ளூர் ஆண் என்றும், புரோட்டோன் சாட்ரியா கார் ஓட்டுநர் 20 வயதுடைய வேலையில்லாத உள்ளூர் ஆண் என்றும் முகமட் அக்மல்ரிசல் தெரிவித்தார். டொயோட்டா வெல்ஃபயர் கார் ஓட்டுநர் 60 வயதுடைய வியாபாரி என்றும் அவர் கூறினார்.
விபத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். விசாரணை தொடங்கப்பட்டு, கவனக்குறைவாகவும், பொறுப்பற்ற விதத்திலும் வாகனம் ஓட்டியதற்காக 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1)-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகே உள்ள எந்தவொரு காவல் நிலையத்தையும் அல்லது வழக்கு விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டர் மாஸ்ரோல் முகமட் டின் அவர்களை 011-1853 9115 அல்லது 03-3187 2222 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.


