கோலாலம்பூர், ஜூலை 14 - மக்களவையின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் (MPs) தங்களின் உடல்நலப் பரிசோதனை அறிக்கைகளை எதிர்வரும் அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஜோஹாரி அப்துல் உத்தரவிட்டுள்ளார்.
அவசர மருத்துவக் காலங்களில் உடனடியாகவும் விரைவாகவும் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியின் உடல்நலம் குறித்த முன்கூட்டிய தகவல்களை நாடாளுமன்றம் தன் வசம் வைத்திருப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மிக முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவர்களைப் பற்றிய தேவையான மருத்துவத் தகவல்கள் நாடாளுமன்றத்திடம் இருப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம், சம்பந்தப்பட்ட உறுப்பினரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், நாடாளுமன்றத்தில் உள்ள மருத்துவத் தகவல்களைத் தாமதமின்றி மருத்துவமனைக்கு அனுப்பி உரிய சிகிச்சையைத் தொடங்க முடியும் என்று அவர் விளக்கியுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே தங்களுக்கு விருப்பமான இடங்களில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு.
ஆனால், அப்படி வெளியில் பரிசோதனை செய்து கொள்பவர்கள் தங்களின் மருத்துவ அறிக்கைகள் அல்லது பரிசோதனை ஆவணங்களைப் பதிவு செய்யும் நோக்கத்திற்காக நாடாளுமன்றத்தில் பணியில் இருக்கும் மருத்துவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேசிய இதயக் கழகத்தில் (IJN) சிகிச்சை பெற்றதாக வெளிவந்த தகவலைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 8-ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளைக் தீவிரமாகக் எடுத்துக்கொள்ள வேண்டும் என டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் நினைவூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.






