சிகிஞ்சான், டிச 2: கடந்த வாரம் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த 134 நெல் வயல்கள் சேதமடைந்தன. இதனால், சிகிஞ்சான் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் உள்ள பல விவசாயிகள் இழப்புகளை சந்தித்துள்ளனர்.
இந்த சம்பவம் சிகிஞ்சான், சுங்கை லேமன் மற்றும் பாசிர் பாஞ்சாங் பகுதிகளில் நடந்துள்ளது. இதில் சிகிஞ்சான் பகுதியே மிக அதிகமாக (70 வயல்கள்) பாதிக்கப்பட்டதாக சிகிஞ்சான் மாநில சட்டமன்ற உறுப்பினர் (ADN) டத்தோ இங் சுய் லிம் தெரிவித்தார்.
“நெற்பயிர்களின் பெரும்பகுதி வெள்ளத்தால் சேதமடைந்தது. இதனால் 70 முதல் 90 சதவீதம் வரை அறுவடை செய்ய முடியவில்லை,” என்று அவர் பாரிட் 6, சிகிஞ்சானில் நடைபெற்ற வயல் ஆய்வின்போது தெரிவித்தார்.
இந்த பேரழிவு நவம்பர் மாத அறுவடை காலத்தில் ஏற்பட்டதால், விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், கூட்டாட்சி அரசு அறிமுகப்படுத்திய நெல் பயிர் தக்காபுல் (Skim Takaful Tanaman Padi) திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி வழங்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
“இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு வயலுக்கும் அதிகபட்சம் RM3,000 வரை இழப்பீடு பெறலாம். முழு இழப்பையும் ஈடு செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் இது அவர்களின் சுமையை ஓரளவு குறைக்க உதவும்,” என்றார்.
இதற்கிடையில், “ஒவ்வொரு வயலும் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்டது மற்றும் பயிரிடும் செலவு RM 10,000 முதல் RM12,000 வரை இருக்கும். தற்போது பயிரின் 10 முதல் 30 சதவீதம் மட்டுமே அறுவடை செய்ய முடிந்தது,” என்று சிகிஞ்சான் C கிராமத் தலைவர் கான் ஜியான் வெங் கூறினார்.
அறுவடை செய்ய முடியாவிட்டால், அரிசி பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளது என்றார்.





