கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியின் இஃப்தார் நிகழ்ச்சி; மசூதிகள் மற்றும் சுராவ்களுக்கு 65,000 ரிங்கிட் நிதியுதவி

9 மார்ச் 2026, 7:17 AM
கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியின் இஃப்தார் நிகழ்ச்சி; மசூதிகள் மற்றும் சுராவ்களுக்கு 65,000 ரிங்கிட் நிதியுதவி

ஷா ஆலம், மார்ச் 9 - கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் நிலவும் சமூக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் வகையில், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன் தலைமையில்; இஃப்தார் மற்றும் மசூதி, சுராக்களுக்கான நிதியுதவி வழங்கும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. 

இப்புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில், தொகுதியிலுள்ள மசூதிகள் மற்றும் சுராக்களின் மேம்பாட்டிற்காக மொத்தம் 65,000  ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டது.

இந்த இஃப்தார் பெருவிழாவானது வெறும் நிதி உதவி வழங்கும் நிகழ்வாக மட்டுமின்றி, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒன்றுகூடி தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு தளமாகவும் அமைந்தது.

இந்நிகழ்வில் உரையாற்றிய மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன், ரமலான் மாதம் என்பது வழிபாட்டிற்குரிய காலம் மட்டுமல்லாமல், சமூகங்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்தவும், பரஸ்பர மரியாதையை வளர்க்கவும் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு என்று குறிப்பிட்டார்.

பன்முகத்தன்மை கொண்ட கோத்தா கெமுனிங் தொகுதியில், ஒவ்வொரு சமூகமும் உரிய கவனத்தையும் ஆதரவையும் பெறுவதை உறுதி செய்வது தமது கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு மக்கள் பிரதிநிதியாகத் தொகுதியிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களையும் பாதுகாப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், இந்த நிதி உதவியானது மத நிறுவனங்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி, சமூக மேம்பாட்டு மையங்களாகவும் திகழ உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இஸ்லாமியர் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஆலயங்கள் தொடர்பான விவகாரங்களை மிகவும் முதிர்ச்சியுடனும் விவேகத்துடனும் கையாள வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு முஸ்லிம் அல்லாத சட்டமன்ற உறுப்பினர் இஸ்லாமிய மத நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும், அதற்குப் பிரதிபலனாக முஸ்லிம் சகோதரர்கள் பிற மதத்தைச் சார்ந்த அண்டை வீட்டாருடன் இணக்கமாக வாழ்வதுமே மலேசியாவின் உண்மையான அழகு என்று அவர் புகழாரம் சூட்டினார்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதி உதவியானது, கோத்தா கெமுனிங் தொகுதியிலுள்ள 9 மசூதிகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட சுராவ்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.