கொலம்பியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 66 பேர் மரணம்

24 மார்ச் 2026, 9:24 AM
கொலம்பியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 66 பேர் மரணம்

பொகோட்டா, மார்ச் 24 – தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் ஒன்று அந்நாட்டின் தெற்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில், குறைந்தது 66 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தை 'அனடோலு அஜான்சி' செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

புடுமாயோ (Putumayo) மாகாணத்தில் உள்ள புவேர்ட்டோ லெகுய்சாமோ (Puerto Leguizamo) தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே 'ஹெர்குலிஸ் சி-130' (Hercules C-130) ரக விமானம் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. அந்த விமானத்தில் 114 ராணுவ வீரர்களும், 11 விமானப் பணியாளர்களும் என மொத்தம் 125 பேர் பயணம் செய்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro), விமானம் விழுந்து நொறுங்கியதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார்.

விபத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக அனைத்து அவசரக்கால நடைமுறைகளையும் முடுக்கிவிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) விடுத்துள்ள அறிக்கையில், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகும் வரை தேவையற்ற ஊகங்களையும் வதந்திகளையும் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். எஞ்சியவர்களின் நிலை குறித்துத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.