சுபாங் ஜெயா, ஜூலை 7 — சிலாங்கூரில் உள்ள இடைநிலை பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் நோக்கில், ஒன்பது மாத கால முயற்சியான, பென்சில் (PENSEL) எனப்படும் சிலாங்கூர் விழிப்புணர்வு திட்டம்' (Program Pencerahan Selangor ) இன்று தொடங்கப்பட்டது.
இத்திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள படிவம் 4-ஐ சேர்ந்த சுமார் 800 மாணவர்களைச் சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.
மீடியா சிலாங்கூர் நிறுவனம் மற்றும் டிம்பா கல்வி குழுமம் (TYMBA Education Group) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திட்டம், மாணவர்கள் தங்களின் கருத்துக்களை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தும் விமர்சன சிந்தனையாளர்களை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
முன்னதாக , மாநில மந்திரி பெசார் தொடக்கி வைத்த PENSEL விழாவில், சிலாங்கூர் மாநில கல்வித் துறையின் துணை இயக்குநர் முகமட் அசுவான் முகமட் நவாவி, மீடியா சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் ஃபாரீட் முகமட் அஷாரி , டிம்பா தலைமை நிர்வாக அதிகாரி ஐரில் ரசாலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஜூலை முதல் மார்ச் வரை நடைபெறும் இந்த பென்சில் இலவசத் திட்டம், பள்ளி நேரத்திற்குப் பிறகு நடத்தப்படும் குழு அடிப்படையிலான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும்.
இத்திட்டத்தில் ஐந்து புத்தகங்கள் ஆராயப்படும், அவை, ராபின் வால் கிம்மரரின் 'The Serviceberry' சையத் உசேன் அல்-அத்தாஸின் Cita Sempurna Warisan Sejarah, ஜே.எம். கல்லிக்கின் Sejarah Selangor 1766-1939 , ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 , ஹா-ஜூன் சாங்கின் Edible Economics ஆகிய புத்தகங்களாகும்.
ஒவ்வொரு வாரமும் நடைபெறும் இந்த பென்சில் திட்டத்தில், புத்தகக் கிளப்புகள் , எழுத்துப் பட்டறைகள் , முக்கியப் பிரமுகர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் தொகுப்பு நூல்களின் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளும் இடம்பெறும்.







