ஈக்களின் தொல்லையால் பத்தாங் காலி கோழிப் பண்ணை மூட உத்தரவு

10 ஏப்ரல் 2026, 6:18 AM
ஈக்களின் தொல்லையால் பத்தாங் காலி கோழிப் பண்ணை மூட உத்தரவு

ஷா ஆலம், ஏப்ரல் 10: சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு ஈக்களால் ஏற்படும் தொந்தரவைத் தொடர்ந்து,பத்தாங் காலியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றுக்கு ஏப்ரல் 8 முதல் 21 வரை இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில் உரிமங்களுக்கான துணைச் சட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுச் சுகாதாரத் துறையின் (JPSPPA) சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டுப் பிரிவினால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (MPHS) தெரிவித்தது.

"அருகிலுள்ள வீட்டுமனைப் பகுதிகளில் ஈக்களின் தொல்லை குறித்து குடியிருப்பாளர்கள் செய்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது."

"பண்ணையில் கோழி எச்சங்களை முறையாக நிர்வகிக்காததால் இந்தத் தொல்லை ஏற்பட்டதாக நம்பப்படுகிறது," என்று அது இன்று ஓர் அறிக்கையில் கூறியது.

MPHS-இன் கூற்றுப்படி, பண்ணை மூடப்பட்டிருக்கும் காலத்தில், சம்பந்தப்பட்ட துறையினரால் பண்ணையின் நிலைமை திருப்திகரமாக உள்ளது என உறுதிசெய்யப் படும் வரை, புதிய கோழிகளை கூண்டுகளுக்குள் கொண்டு வர நிறுவனம் அனுமதிக்கப்படாது.

மேலும், மதிப்பீட்டு நோக்கங்களுக்காக, ஈக்களைக் கட்டுப்படுத்தும் திட்டம் மற்றும் கோழி எச்சங்களை நிர்வகிக்கும் திட்டத்தை தயாரிக்குமாறு பண்ணை உரிமையாளருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

"நீண்ட கால நடவடிக்கையாக, கோழி வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு புதிய இடத்தைக் கருத்தில் கொள்ளுமாறு நிறுவனத்திற்குப் பரிந்துரைக்கப்படுகிறது," என்று அது மேலும் கூறியது.

இதற்கிடையில், வணிகங்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவதையும், மக்களின் நலனைப் பாதிக்காமல் இருப்பதையும் உறுதி செய்வதில் MPHS உறுதியாக உள்ளது என வலியுறுத்தியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.