ஷா ஆலாம்,ஜூலை 3 - கோலா சிலாங்கூர், தாமான் கியாராவில் உள்ள கார் கழுவும் மைய ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவ நால்வர் கைது செய்யப்பட்டனர்.
அச்சம்பவம் தொடர்பான ஒரு நிமிடம் 20 வினாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியது.
அந்த காணொளி குறித்து கடந்த புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரிண்டெண்டன் அசாஹருடின் தாஜுடின் (Superintendan Azaharudin Tajudin) தெரிவித்தார்.
"கடந்த ஜூன் 30-ஆம் தேதி, தொயோத்தா ஹிலக்ஸ் காரை ஓட்டி வந்த உள்ளூர் ஆடவர் ஒருவர், மஞ்சள் நிற பாதுகாப்பு கூம்பைப் (safety cone) பயன்படுத்தி ஊழியர் ஒருவரைத் தாக்கியதோடு, அவரைப் பலமுறை குத்தியதாக விசாரணை மூலம் தெரியவந்தது.
காரைக் கழுவியதற்கான கட்டணத்தை செலுத்தும் போது, பாதிக்கப்பட்ட ஊழியர் தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகக் கூறி, அந்த உள்ளூர் ஆடவர் அடைந்த அதிருப்தியே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என நம்பப்படுவதாக , அசாஹருடின் தாஜுடின் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், கைது செய்யப்பட்ட நால்வரில் முக்கிய சந்தேக நபர், முறையான அனுமதி இன்றி வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்திய கார் கழுவும் மையத்தின் உரிமையாளர் ஆவார்.
மேலும் முறையான பயண ஆவணங்கள் இல்லாத இந்திய நாட்டைச் சேர்ந்த இரு வெளிநாட்டு ஊழியர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.




