ஷா ஆலம், ஜூன் 13: சிலாங்கூர் மாநிலத்தின் இளம் தலைமுறையினரிடையே மின்-விளையாட்டு அல்லது 'இ-ஸ்போர்ட்ஸ்' (e-Sukan) துறையை முறையாகவும் தொழில்முறையாகவும் மேம்படுத்தும் நோக்கில், சிலாங்கூர் மந்திரி புசார் மந்திரி கார்ப்பரேஷன் எனப்படும் எம்பிஐ (MBI) அறவாரியம் ஒரு லட்சம் ரிங்கிட் நிதியுதவியை வழங்கியுள்ளது.
'எஸ்ஆர்ஜி 2026 மின்-விளையாட்டுப் பள்ளி' (Sekolah e-Sukan SRG 2026) திட்டத்தின் அதிகாரப்பூர்வ ஆதரவாளரான எம்பிஐ அறவாரியம், இத்துறையில் இளம் திறமையாளர்களை உருவாக்குவதற்காக இந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தத் திட்டம் வெறும் போட்டித்தன்மை வாய்ந்த மின்-விளையாட்டாளர்களை உருவாக்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், இன்றைய டிஜிட்டல் யுகத்தின் தேவைக்கேற்ப மாணவர்களிடையே ஒழுக்கம், தலைமைத்துவப் பண்பு மற்றும் டிஜிட்டல் திறன்களையும் வளர்க்கும் நோக்கம் கொண்டது என எம்பிஐ அறவாரியம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இளைஞர் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் தொழில்துறை மீதான தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் 10 பள்ளிகளுக்கு தலா 10,000 ரங்கிட் வீதம் மொத்தம் 1 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு குறிப்பிட்டது.
இந்த நிதியுதவியானது மாணவர்களின் பங்களிப்பை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் சிலாங்கூர் மாநிலத்திற்கும் மலேசியாவிற்கும் உலக அரங்கில் பெருமை சேர்க்கக்கூடிய பல மின்-விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் பெரிதும் துணைபுரியும் என நம்பப்படுகிறது.
மேலும், இளம் திறமையாளர்களை முறையாகக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கி, இத்துறையில் அவர்களை மேம்படுத்துவதற்காகவே இந்தத் திட்டம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
முறையான பயிற்சி மற்றும் விரிவான மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம், மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்வதோடு, வேகமாக வளர்ந்து வரும் மின்-விளையாட்டுத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் எதிர்காலப் சாத்தியக்கூறுகளைப் புரிந்து கொள்ளவும் இந்தத் திட்டம் ஒரு நல்வாய்ப்பாக அமையும்.
இந்த 'எஸ்ஆர்ஜி 2026 மின்-விளையாட்டுப் பள்ளி' திட்டமானது, போட்டிகளில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி, சிறந்த ஆளுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட எதிர்கால சாம்பியன்களை உருவாக்கும் ஒரு சிறந்த தளமாக விளங்கும் என எம்பிஐ அறவாரியம் பெரும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.







