கோலாலம்பூர், ஜூன் 9 – மலேசியத் தேர்தல் ஆணையம் (SPR), 16ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் முக்கியத் தேதிகள் குறித்து விவாதிப்பதற்காக எதிர்வரும் ஜூன் 12ஆம் தேதி சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
இக்கூட்டம், 16ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தல் தொடர்பான சிறப்புக் கூட்டத்துடன் இணைத்து நடத்தப்படவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 15ஆவது நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ கைருல் ஷஹ்ரில் இட்ருஸ் தெரிவித்தார்.
நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹாரூன் தலைமையில் நடைபெறவுள்ள இச்சிறப்புக் கூட்டத்தில், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான முக்கியத் தேதிகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
குறிப்பாக, தேர்தல் ஆணைச்சீட்டு (writ) வெளியிடப்படும் தேதி, வேட்புமனுத் தாக்கல் நாள், முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்யும் நாள், அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு நாள், வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் நடத்துவதற்கான இதர ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்," என்று கூறியுள்ளார்.
இச்சிறப்புக் கூட்டம் நிறைவடைந்த உடனே, தேர்தல் ஆணையம் தங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளை அறிவிப்பதற்காகச் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தும் என்றும் கைருல் ஷஹ்ரில் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் 36 தொகுதிகளைக் கொண்ட நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






