கெந்திங் ஹைலண்ட்ஸ், பிப் 13 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) பெரும்பாலான விசாரணை அறிக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படுகின்றன. வழக்குகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுவதற்கோ அல்லது "கிடப்பில் போடப்படுவதற்கோ" எந்த அறிகுறியும் இல்லை என்று அதன் செயல்பாட்டு மதிப்பீட்டுக் குழு (பி.பி.ஓ.) கண்டறிந்துள்ளது.
12 மாதங்களுக்கு மிகாமல் விசாரணை வரம்பு உட்பட, சரியான நேரத்திற்குள் முடிக்கப்படும் விசாரணை அறிக்கைகளின் சதவீதமே பி.பி.ஓ.விடம் தெரிவிக்கப்படும் முக்கிய விஷயங்களில் ஒன்றாகும் என்று அதன் தலைவர் டத்தோ அகமட் ரோஸ்லி முகமட் ஷாம் கூறினார்.
"இலக்கை ஏன் அடையவில்லை என்று நானும் மற்ற பி.பி.ஓ. உறுப்பினர்களும் கேள்வி கேட்பது அரிது. ஒருவேளை இலக்கை அடையவில்லை என்றால், நாங்கள் விளக்கம் கேட்போம். இதுவரை எந்தப் பிரச்சனையும் எழவில்லை,"
என்று 'ஊழலை எதிர்ப்பதில் எம்.ஏ.சி.சி.யின் பங்கைப் புரிந்துகொள்ளுதல்' என்ற ஊடகவியல் பயிலரங்கின் இடையே செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
பி.பி.ஓ.வின் பங்கு குறித்து மேலும் விவரித்த அகமட் ரோஸ்லி, இக்குழு செயல்திறனைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், விசாரணையில் உள்ள குறைபாடுகள் கவனிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, 'மேல் நடவடிக்கை இல்லை' (NFA) என வகைப்படுத்தப்பட்ட வழக்குகளையும் மறுஆய்வு செய்வதாகக் கூறினார்.
"இந்த மதிப்பீடு பல கோணங்களில் செய்யப்படுகிறது. முதலாவதாக, விசாரணையிலேயே மேம்படுத்தப்பட வேண்டிய ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது ஆராயப்படும்."
"அல்லது, ஒரு விசாரணை மற்றொரு கோணத்தைக் கணக்கில் எடுக்கத் தவறினால், வேறு கோணத்தில் விசாரிக்க நாங்கள் அறிவுறுத்துவோம் அல்லது உத்தரவிடுவோம். ஒருவேளை விசாரணையில் ஊழல் குற்றம் கண்டறியப்படவில்லை என்றாலும், வேறு குற்றங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளதா என்பதும் ஆராயப்படும்," என்றார் அவர்.
முன்னதாக, உள்ளூர் ஊடகங்களுடனான அந்த நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, 2009 முதல் கடந்த ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மேல் நடவடிக்கை இல்லை (NFA) என்ற முடிவுடன் 1,869 விசாரணை அறிக்கைகளை எம்.ஏ.சி.சி., பி.பி.ஓ.விடம் சமர்ப்பித்ததாக அவர் வெளிப்படுத்தினார்.
அந்த எண்ணிக்கையில், 1,760 NFA முடிவுகளுக்கு பி.பி.ஓ. ஒப்புதல் அளித்தது, அதே நேரத்தில் 136 விசாரணை அறிக்கைகள் மறுஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டன.
விசாரணை அதிகாரிகளின் நிபுணத்துவத்தை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் உட்பட, குழுவின் விமர்சனங்களை எம்.ஏ.சி.சி. திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அகமட் ரோஸ்லி கூறினார்.
-- பெர்னாமா
எம்.ஏ.சி.சி. விசாரணையில் வழக்குகள் கிடப்பில் போடப்படும் பிரச்சனை இல்லை - பி.பி.ஓ. தலைவர்
13 பிப்ரவரி 2026, 6:40 AM


