ஜோகூர் பாரு நகரின் புற நகரில் அமைந்துள்ள அமைதியான மாவட்டமான கூலாய், நாட்டின் தரவு மையமாக (data hub) உருவெடுத்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகிறது

5 ஜூன் 2026, 6:27 AM
ஜோகூர் பாரு நகரின் புற நகரில் அமைந்துள்ள அமைதியான மாவட்டமான கூலாய், நாட்டின் தரவு மையமாக (data hub) உருவெடுத்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகிறது

ஜோகூர் பாரு நகரின் புற நகரில் அமைந்துள்ள அமைதியான மாவட்டமான கூலாய், நாட்டின் தரவு மையமாக (data hub) உருவெடுத்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகிறது.

இருப்பினும், இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், கூலாயில் உள்ள ஏழு ஃபெல்டா பகுதிகளில் ஒன்றான ஃபெல்டா தாயிப் அண்டாக்கில் உள்ள ஓர் இடத்தில் காலம் உறைந்து நிற்பது போல் தோன்றுகிறது.

செம்பனைத் தோட்டங்களின் பசுமைக்கு மத்தியில், 21 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட புத்தர் கோயில் மற்றும் மூங்கில் பூங்காவான 'புத்துவ கிராமம்' (Putuo Village) அமைந்துள்ளது.

இங்கு, மூங்கில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் கலந்துள்ளது. கட்டிடங்கள் முதல் பூங்காவை அலங்கரிக்கும் கலைப் படைப்புகள் வரை, கிட்டத்தட்ட அனைத்தும் மூங்கிலால் செய்யப் பட்டவை.

மூங்கில் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் புரிந்து கொள்ள, மூங்கில் பூங்காவிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

சீனாவில் உள்ள புத்த மதத்தினரின் நான்கு புனித மலைகளில் ஒன்றான புத்துவ மலையின் (Mount Putuo) நினைவாக இந்த கிராமத்திற்கு பெயரிடப்பட்டது.

இது சீன மொழியில் 'குவான் யின்' (Guanyin) என்று அழைக்கப்படும் கருணை தெய்வத்தின் புராண இருப்பிடமாகவும் கருதப்படுகிறது.

அங்குள்ள ஊழியர்களில் ஒருவரான சியூ ஆ வெய் கூறுகையில், இந்த கோயில் குவான் யின்னிற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது என்றார்.

ஆனால், அதற்கும் மூங்கிலுக்கும் என்ன தொடர்பு?“குவான் யின் மூங்கிலுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர். புராணக் கதைகளின்படி, அவர் மூங்கில்கள் நிறைந்த பகுதியில் வசித்து வந்தார்,” என்று நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடியே அவர் கூறினார்.

அப்போது, நண்பகல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், மழை மேகங்கள் நெருங்குவதை உணர முடிந்தது.

வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை இருந்தபோதிலும், கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை.

அன்று விசாக தினம் என்பதால், பிரார்த்தனை செய்ய வந்த புத்த மதத்தினரால் கோயில் நிரம்பி வழிந்தது. கோயிலுக்கு உள்ளேயிருந்து தொடங்கி, பார்வையாளர்களின் தலைக்கு மேல் மிதப்பது போல் காட்சியளித்த பிரம்மாண்டமான நாகர் சிலையின் அருகே வரை நீண்ட வரிசை காணப்பட்டது.

சுமார் 200 கிலோ கிராம் எடையுள்ள அந்த நாகத்தின் தலை, மேல்நோக்கிப் பார்த்தவாறு, அதன் மீசை தொங்கிக் கொண்டும், வாய் திறந்த நிலையில் கூர்மையான கோரைப் பற்கள் தெரியும் படியும் வடிவமைக்கப் பட்டிருந்தது.

அதன் கூர்மையான நகங்களைக் கொண்ட முன் கால்கள், தனக்கு மரியாதை செலுத்தாத எவரையும் தாக்கத் தயாராக இருப்பது போல் விரிந்திருந்தன. இந்தோனீசிய மற்றும் மலேசிய கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அதன் பிரம்மாண்டமான அளவும், நுணுக்கமான வேலைப் பாடுகளும் பார்வையாளர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தின.

கோயிலைப் போலவே, இந்த நாக சிலையும் கிட்டத்தட்ட முழுமையாக மூங்கிலால் செய்யப்பட்டது. "மூங்கில் ஒரு நல்ல அடையாளமாகும். இது அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் ஆரோக்கியத்தின் சின்னமாக விளங்குகிறது," என்று சியூ மேலும் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500,000 பார்வையாளர்கள் இங்கு வருவதாகவும், மத மற்றும் சீனப் பண்டிகைக் காலங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மூங்கில் பூங்கா, பல்வேறு இனங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களை, குறிப்பாக ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வருகையளர்களை  ஈர்க்கிறது.

மேலும், இன்ஸ்டாகிராம் பயனர்கள் மத்தியில் புகைப்படம் எடுப்பதற்காக இது மிகவும் பிரபலமாக உள்ளது.

மறைக்கப்பட்ட புதையல்

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்தாலும், புத்துவ   கிராமத்தின் இருப்பு பலருக்குத் தெரியாது. இந்தக் கோயில் 2005-இல் கட்டப்பட்டது, ஆனால் 2023-இல் மூங்கிலை அடிப்படையாகக் கொண்டு பெரிய அளவில் புனரமைக்கப்பட்டு மீண்டும் வடிவமைக்கப்பட்டது.

ஜோகூரைச் சேர்ந்த சில உள்ளூர்வாசிகள் உட்பட பல பார்வையாளர்கள், தாங்கள் கூகுள் தேடல் மூலமாகவோ அல்லது நண்பர்களின் பரிந்துரையின் பேரிலோதான்  புத்துவ கிராமத்தைப் பற்றி அறிந்ததாக பெர்னாமாவிடம் தெரிவித்தனர்.

"இந்தப் பகுதி ஒரு மறைக்கப்பட்ட புதையல்," என்கிறார் மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (ஸ்கூடாய் வளாகம்) நில வடிவமைப்புத் துறைத் தலைவர் டாக்டர் லீ யோக் லாய்.

அவர் அந்தப் பகுதிக்கு அருகிலேயே பணிபுரிந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தங்கையின் மூலமாகத்தான்  புத்துவ   கிராமத்தைப் பற்றி அறிந்து கொண்டார்.

அதன் பிறகு, டாக்டர் லீ இரண்டு முறை  புத்துவ   கிராமத்திற்குச் சென்றுள்ளார். மூங்கில் பூங்காவிற்குச் செல்ல, பார்வையாளர்கள் நேரடியாக அந்த இடத்திற்குச் செல்லலாம்.

குவான் யின் கோயிலில் இருந்து, கன்பூசியஸின் பொன்மொழிகள் மற்றும் புத்த மத சின்னங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதையில் செல்ல வேண்டும். சாதாரணமாகத் தொடங்கிய பயணம், உடற்பயிற்சி செய்யாதவர்களைச் சற்று மூச்சு வாங்க வைக்கும் ஒரு சிறிய மலை ஏற்றமாக மாறியது.

மலையுச்சியில், பார்வையாளர்கள் இளைப்பாறுவதற்காக மூங்கிலால் செய்யப்பட்ட இரண்டு அடுக்கு ஓய்விடம் உள்ளது. வெப்பத்தைத் தணிக்க, குளிர்பானங்கள் மற்றும் பனிக்கூழ் கடைகள் உள்ளன.

அந்த ஓய்விடத்திற்கு அருகில் மூங்கில் பூங்காவின் நுழைவாயில் அமைந்துள்ளது. பெரியவர்களுக்கு RM10 மற்றும் குழந்தைகளுக்கு RM5 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

திருமணமான தம்பதிகள் மற்றும் காதலர்கள் மத்தியில் இந்த பூங்கா மிகவும் பிரபலம் என்று சியூ கூறினார். மேலும், இங்கு பல சீன கலாச்சார கூறுகள் இடம்பெற்றுள்ளன.

அனைத்து பார்வையாளர்களையும் வரவேற்கும் விதமாக, புத்த மத சின்னங்கள் குறைவாகவே வைக்கப்பட்டுள்ளன.

"புத்த மதத்தை மட்டும் மையப்படுத்தினால், புத்த மதத்தினர் மட்டுமே வருவார்கள்," என்றார் அவர்.

மூங்கில் பூங்கா பரந்து விரிந்துள்ளது. உள்ளே நுழைந்தவுடன், பார்வையாளர்கள் பல திசைகளுக்குச் செல்லும் பாதைகளைக் காண்பார்கள். குதிரை ஆண்டை முன்னிட்டு மூங்கிலால் செய்யப்பட்ட இறக்கைகள் கொண்ட குதிரைச் சிலையை நோக்கிச் செல்லும் பிரதானப் பாதை மிகவும் பிரபலமானது.

பாதை நெடுகிலும் மூங்கில் மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.அங்குள்ள பல்வேறு கலைப் படைப்புகளுக்கு அருகில் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுப்பதைக் காண முடிந்தது.

இறக்கைகள் கொண்ட குதிரைச் சிலை தவிர, ராட்சத காற்றாலைகளும் மற்றொரு ஈர்ப்பாகும். துரதிர்ஷ்டவசமாக, அன்று காற்று இல்லாததால் காற்றாலைகள் சுழலவில்லை.

சுற்றுலா மேம்பாட்டு மேலாளர் லிம் டெக் ஹ்வி கூறுகையில், மூங்கில் பூங்காவில் "மேகங்களில் மீன்" போன்ற பல்வேறு கலைப்படைப்புகள் உள்ளன. இது வண்ணமயமான கோய் மீன்கள் மேகக் கடலில் நீந்துவது போல் காட்சியளித்து, செழிப்பையும், வளத்தையும், கனவுகளைத் துரத்தும் சுதந்திரத்தையும் குறிக்கிறது.

மற்றொரு ஈர்ப்பு "ஓய்வு குடை" ஆகும். இது மூங்கில் காட்டிற்கு நடுவே ஒரு தனித்துவமான ஓய்வு இடத்தை உருவாக்குகிறது.

இயற்கையையும் கலாச்சாரத்தையும் சமநிலைப்படுத்துதல்

புத்த போதனைகளில், மூங்கில் ஆன்மீக வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் ஞானத்தின் சின்னமாக விவரிக்கப்படுகிறது.

அறிவியல்பூர்வமாக, மூங்கில் ஒரு சிறந்த கார்பன் உறிஞ்சியாக செயல்படுகிறது மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைக்க உதவுகிறது.பசுமை உள்கட்டமைப்புத் துறையில் நிபுணரான டாக்டர் லீ, கலாச்சாரக் கூறுகள் மற்றும் பசுமை உள்கட்டமைப்பை இணைப்பது ஒரு சிறந்த நடவடிக்கை என்றார்.

"இயற்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சாரத் தலத்தை உருவாக்க மூங்கில் காட்டை வெற்றிகரமாக ஒருங்கிணைத்ததற்காக புத்ரா கிராமத்தைப் பாராட்ட விரும்புகிறேன்.

இது ஒரு மிகச் சிறந்த கலவை என்று நான் நினைக்கிறேன்," என்றார்.தரவு மைய முதலீடுகள் மற்றும் மேம்பாடுகள் அதிகரித்து வரும் கூலாய்க்கு,  புத்துவ கிராமம் ஒரு "ஆக்சிஜன் வழங்கும் நுரையீரல்" ஆக செயல்படுவதாக அவர் கூறினார்.

கூலாய் எதிர்காலத்தில் ஒரு கான்கிரீட் நகரமாக மாறுவதை நாம் விரும்பவில்லை என்றும், மேலும் பல பசுமை உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இங்கு வருகை தந்த பார்வையாளர்கள், மூங்கில் பூங்காவின் இயற்கை அழகால் ஈர்க்கப் பட்டதாகக் கூறினர். உலு திராமைச் சேர்ந்த விமலா செல்வராஜ், "மன அழுத்தத்தைப் போக்க இதுபோன்ற அமைதியான சூழலை நான் விரும்புகிறேன்," என்றார்.

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தோனேசியர் மூன், அவரும் அவரது கணவர் காரிஸும் நகர வாழ்க்கையில் சலிப்படைந்து கூலாய்க்கு வந்ததாகக் கூறினார்.

"ஜோகூர் பாருவில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. எனக்கு ஷாப்பிங் பிடிக்காது. அமைதியான சூழலையே நான் விரும்புகிறேன்," என்றார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.