கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்துவதன் வழி, நாட்டு வளம் மக்களுக்கே திருப்பியளிக்கப்படும் - பிரதமர்

31 மே 2026, 1:49 AM
கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்துவதன் வழி, நாட்டு வளம் மக்களுக்கே திருப்பியளிக்கப்படும் - பிரதமர்

பினாம்பாங், மே 30:- அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவைகளின் செலவினங்கள் தொடர்பில் மடாணி அரசாங்கம் தற்போது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் மூலம் சேமிக்கப்படும் நிதி மக்களின் நல்வாழ்வுக்காக முழுமையாகச் செலவிடப்படும் எனவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அமைச்சுக்களுக்கான தேவையற்ற செலவின- ங்களுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்று கூறிய அவர், அதேவேளையில் கல்வி, சுகாதாரம் மற்றும் சபா உட்பட நாடு முழுவதுமான அடிப்படை உள்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளுக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் என்றார்.

ஆசியான் (ASEAN), பிரிக்ஸ் (BRICS) அல்லது அபெக் (APEC) போன்ற கட்டாயக் கூட்டங்களை தவிர்த்து, அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுப்படுத்துவதும் இந்தச் சிக்கன நடவடிக்கைகளில் அடங்கும் என அன்வார் குறிப்பிட்டார்.

"வெறுமனே படிப்புச் சுற்றுலா போன்ற பயணங்கள் அனைத்தும் கூட்டரசு அளவில் ரத்து செய்யப் பட்டுள்ளன. அத்தியாவசியப் பயணங்களில் கூட, ஆறு பேர் கொண்ட குழுவாக இருந்தால் அது இருவராகக் குறைக்கப் படும். தங்கும் விடுதிகளில் 'ராயல் சூட்' (Royal Suite) அறைகளுக்குப் பதிலாக 'ஜூனியர் சூட்' (Junior Suite) அறைகள் மட்டுமே வழங்கப்படும்," என்று அவர் கூறினார்.

இங்குள்ள கடசான் டூசுன் கலாச்சார சங்கத்தில் (KDCA - Hongkod Koisaan) இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான சபா மாநில அளவிலான காமாத்தான் பெருவிழாவை (Pesta Kaamatan) அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர், துணை முதலமைச்சர் I டத்தோஸ்ரீ டாக்டர் ஜோக்கிம் குன்சலாம் மற்றும் கேடிசிஏ (KDCA) தலைவர் டான்ஸ்ரீ ஜோசப் பைரின் கிட்டிங்கான் ஆகியோரும் கலந்து கொண்டனர். வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்து, அரசாங்கப் பயிற்சிகளை நடத்தும் முறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இனி ஆடம்பர விடுதிகளுக்குப் பதிலாக அரசாங்கத் துறைகளுக்குச் சொந்தமான வசதிகளிலேயே அவை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்."நாம் விவேகத்துடன் செயல் பட்டு சிக்கனத்தைக் கடைப் பிடிக்காவிட்டால், நாட்டைக் காப்பாற்ற முடியாது. இவ்வாறு சேமிக்கப்படும் பணமே மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது," என்று அவர் விளக்கினார்.

இதற்கிடையே, நல்லாட்சியை வலுப்படுத்தும் மற்றும் ஊழலை ஒழிக்கும் முயற்சிகள் எந்தவித அரசியல் நோக்கத்தையும் கொண்டிருக்க-வில்லை என்றும், நாட்டின் நிதியாதாரத்தை மீட்டெடுப்பதே அதன் முக்கிய நோக்கம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.நிதி சேமிப்பு மற்றும் மீட்டெடுப்பின் விளைவாக, ரஹ்மா ரொக்க உதவி (STR) மற்றும் ரஹ்மா அடிப்படை உதவி (SARA) போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் 15.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒதுக்கீட்டை அரசாங்கத்தால் மீண்டும் மக்களுக்கு வழங்க முடிந்தது என்றார் அவர்.

மேலும், 1 பில்லியன் ரிங்கிட் கூடுதல் செலவில் பல்லாயிரக்கணக்கான பள்ளி கழிப்பறைகளைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அத்துடன், நாடு முழுவதுமுள்ள பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கு 100 ரிங்கிட் புத்தக வவுச்சர்களும் உடனடியாக வழங்கப் பட்டுள்ளன.

இதற்கிடையில், நிச்சயமற்ற உலகளாவிய புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் முன்னேற்றங்களை எதிர்கொள்வதில், மலேசியாவின் வெளியுறவுக் கொள்கையானது வெறுமனே 'நடுநிலை' (neutrality) வகிப்பதற்குப் பதிலாக 'மையத்தன்மை' (centrality) அல்லது 'சுதந்திரமான' நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என பிரதமர் குறிப்பிட்டார்.

"நாம் நடுநிலையை மட்டும் பயன்படுத்த வில்லை, ஏனெனில் வேறு இடங்களில் அநீதி, வன்முறை மற்றும் கொலைகள் நடக்கும் போது, அதை வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல. மையத்தன்மை என்பது சுதந்திரமாகச் செயல்படுவதாகும்," என்று மலேசியா அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதைச் சுட்டிக்காட்டி அவர் கூறினார்.

கொள்கை அடிப்படையிலான மற்றும் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான வெளியுறவுக் கொள்கை அணுகுமுறையானது, அமெரிக்கா மற்றும் சீனாவுடனான மலேசியா- வின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தப் பெரிதும் பங்களித்துள்ளது என்று அன்வார் கூறினார்.

‘‘அவர்கள் இங்கு வருவதும், நாம் அவர்களின் நாடுகளுக்குச் செல்வதும், நமது மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மையளிக்கும் என்ற நோக்கத்திற்காகவே ஆகும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.