ஷா ஆலம், மே 26: இதயப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக், கோத்தா கெமுனிங் தொகுதி அலுவலகம் ஏற்பாடு செய்த 'சேவ் தி ஹார்ட் 7.0' (Save the Heart 7.0) சமூக சுகாதாரத் திட்டம், ஆரம்பக்கட்ட மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஷேக் போலிகிளினிக்கில் (Poliklinik Shaik) நடைபெற்ற இத்திட்டம் காலை 8.30 மணிக்குத் தொடங்கியது. இதில் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் இதயப் பராமரிப்பு தொடர்பான தகவல் பகிர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்கள் அன்றாட பணிகளில் பரபரப்பாக இருப்பதனால், தங்களின் தனிப்பட்ட ஆரோக்கியத்தைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். அதனால், இதுபோன்ற திட்டங்கள் மிகவும் முக்கியமானது என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தெரிவித்தார்.
பலர் குடும்பம் மற்றும் எதிர்காலத்திற்காகக் கடுமையாக உழைக்கின்றனர், ஆனால் இந்தப் பரபரப்பான சூழ்நிலையால் ஆரோக்கியம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
"உண்மையில், ஆரோக்கியமான உடல் இல்லாமல் நாம் வாழ்க்கையைச் சிறப்பாக அனுபவிப்பது கடினம். ஆரோக்கியத்தைப் பேணுவது என்பது நோய்வாய்ப்படும்போது மட்டும் செய்வதல்ல, அது ஒரு தொடர்ச்சியான பழக்கமாக இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு நினைவூட்ட 'சேவ் தி ஹார்ட் 7.0' போன்ற திட்டங்கள் முக்கியமானவை," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சரிவிகித உணவு, முறையான உடற்பயிற்சி மற்றும் ஆரம்பக்கட்ட மருத்துவப் பரிசோதனை போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்கள் தீவிரமான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
தற்போது மலேசியர்களிடையே இதய நோய்கள் அதிகரித்து வருவதாகவும், இதற்குச் சமூகம் உட்பட அனைத்துத் தரப்பினரின் தீவிரக் கவனம் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் முயற்சிகளின் மூலம் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதில் கோத்தா கெமுனிங் தொகுதி அலுவலகத்தின் அர்ப்பணிப்பை இத்திட்டம் பிரதிபலிக்கிறது எனவும் பிரகாஷ் விளக்கினார்.
தீவிரமான உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு முன்பாகவே, மக்கள் தங்களின் ஆரோக்கிய நிலையைக் கண்டறிய ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் மூலமான தடுப்பு முறைகள் அவசியம் என்றும் அவர் மேலும் கூறினார்.
சமூகத்தில் மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கையை வளர்ப்பதற்கான ஆரம்பக் கட்டமாக இதுபோன்ற திட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் 'சேவ் தி ஹார்ட் 7.0' திட்டம்
26 மே 2026, 1:48 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
தொழில்நுட்பப் புரட்சியால் வேலை இழந்த உயர் அதிகாரிகளுக்கும் 'திவேட்' (TVET) பயிற்சி வழங்க வேண்டும்
Shalini Rajamogun, Yasmin Ramlan
22 ஜூன் 2026

selangor
கோத்தா கெமுனிங் வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவுபடுத்த சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்
Shalini Rajamogun, Sheeda Fathil
10 ஜூலை 2026

selangor
புத்ரா ஹைட்ஸ் மக்கள் சந்திப்பு: பொது வசதிகள் மற்றும் தூய்மை பிரச்சனைகள் குறித்து புகார்கள்
Shalini Rajamogun
25 ஜூன் 2026

selangor
கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியின் இஃப்தார் நிகழ்ச்சி; மசூதிகள் மற்றும் சுராவ்களுக்கு 65,000 ரிங்கிட் நிதியுதவி
Mavitthran
9 மார்ச் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



