சுங்கை பூலோ, மே 23: துரிதமான உள்கட்டமைப்பு மற்றும் விரிவான மேம்பாட்டுப் பணிகளின் வளர்ச்சியால், சிலாங்கூரில் அதிக ஆற்றல் கொண்ட பகுதிகளில் ஒன்றாக செலாயாங் உருவெடுத்துள்ளது.
இந்த நிலைக்கு, செலாயாங் நகராட்சி மன்றம் (MPS) திட்டமிட்ட மற்றும் நிலையான மேம் பாட்டை உறுதி செய்ய தனது நகரமைப்புத் திட்டத்தை மிகவும் விரிவான முறையில் வலுப்படுத்த வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் தெரிவித்தார். செலாயாங்கிற்கு இனி முன்பு போல சிறிய அளவிலோ அல்லது தனித் தனியாகவோ திட்டமிட முடியாது என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.
மாறாக, இப்பகுதிக்கு வீடமைப்பு, தொழில் துறை, சாலைத் தொடர்புகள், பசுமைப் பகுதிகள் மற்றும் இலக்கவியல் (டிஜிட்டல்) வசதிகள் உள்ளிட்ட பழைய மற்றும் புதிய மேம்பாடுகளை உள்ளடக்கிய ஒரு விரிவான பெருந்திட்டம் (master plan) தேவை என்று அவர் கூறினார்.
கடந்த சில தசாப்தங்களாக செலாயாங்கில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள், இப்பகுதி மிகவும் நவீன மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த நகரமாக வளரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
"2008-ஆம் ஆண்டு வாக்கில் செலாயாங்கின் மேம்பாட்டை நான் பார்த்தபோது, ஒழுங்கற்ற மேம்பாடு, சட்டவிரோதமாக குப்பைகளை வீசும் பிரச்சினை மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நெரிசலான பழைய பகுதிகள் ஆகியவை அப்போதைய முக்கிய சவால்களாக இருந்தன.
"ஆனால் இன்று, செலாயாங் பெரும் உருமாற்றத்தைச் சந்தித்துள்ளது, மேலும் இது மிகவும் பரந்த மேம்பாட்டுத் திறனைக் கொண்டுள்ளது," என்று அவர் கூறினார்.நேற்று இரவு இங்கு நடைபெற்ற 'Selayangku Sayang Bandaraya Pintar 2030' (எனது அன்பான செலாயாங்: திறன்மிகு மாநகரம் 2030) காபி டேபிள் புத்தக வெளியீட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.
தற்போது பல நூறு மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ள எம்.பி.எஸ் (MPS) வருமான உயர்வு, உள்ளாட்சி மன்றம் மிகவும் உத்திபூர்வமாக மேம்பாட்டைத் திட்டமிடுவதற்கு அதிக வாய்ப்புகளை வழங்குகிறது என்று அமிருடின் கூறினார்.
எவ்வாறாயினும், தரமான பொது வசதிகள், மிகவும் வசதியான நகர்ப்புற சூழல் மற்றும் கவனமாக திட்டமிடப்பட்ட மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இந்த வருமான அதிகரிப்பு மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ரவாங் மற்றும் செரண்டாவிற்கான இணைப்புச் சாலைகள் போன்ற புதிய உள்கட்டமைப்பு கட்டுமானங்களைத் தொடர்ந்து செலாயாங் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் மேம்பாட்டை உச்சநிலைக்குக் கொண்டுச் செல்வதே தற்போது எம்.பி.எஸ்ஸின் முக்கிய சவாலாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.அவரைப் பொறுத்தவரை, போக்குவரத்து நெரிசல், அடிப்படை வசதிகள் பற்றாக்குறை, வடிகால் பிரச்சினைகள் மற்றும் சமநிலையற்ற மேம்பாடு ஆகியவற்றைத் தவிர்க்க செலாயாங் பாரு போன்ற முதிர்ச்சியடைந்த பகுதிகளிலும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அத்துடன், எதிர்காலத்தில் செலாயாங் ஒரு மாநகரமாக வளர்ச்சியடையும் வகையில் எம்.பி.எஸ் முன்கூட்டியே மேம்பாட்டைத் திட்டமிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.








