RM 73.63 மில்லியன் மதிப்பிலான பல்வேறு பொருட்களின் கடத்தல் முயற்சியை  சிலாங்கூர் சுங்கத்துறை முறியடித்தது

22 மே 2026, 6:52 AM
RM 73.63 மில்லியன் மதிப்பிலான பல்வேறு பொருட்களின் கடத்தல் முயற்சியை  சிலாங்கூர் சுங்கத்துறை முறியடித்தது

ஷா ஆலம், மே 22: சுங்க வரி உட்பட மொத்தம் RM 73.63 மில்லியன் என மதிப்பிடப்பட்ட சிகரெட்டுகள், மதுபானங்கள், வாகனங்கள் மற்றும் முன் தயாரிக்கப்பட்ட தரவு மையத் தொகுதிகள் (prefabricated data center modules) ஆகியவற்றை கடத்தும் முயற்சியை சிலாங்கூர் மலேசிய அரச சுங்கத்துறை (JKDM) முறியடித்துள்ளது.

ஏப்ரல் 30ஆம் தேதி மேற்கு துறைமுகத்தின் (Pelabuhan Barat) தடையற்ற வர்த்தக மண்டலத்தில் 10 கொள்கலன்களில் (containers) கண்டுபிடிக்கப்பட்ட 87.42 மில்லியன் வெள்ளை சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டதே இதில் மிகப்பெரிய கைப்பற்றலாகும் என்று சிலாங்கூர் சுங்கத்துறை இயக்குநர் முகமட் அசார் அகமட் பஹாராசி தெரிவித்தார்.

கிள்ளான் துறைமுகம் வழியாகக் கொண்டுவரப் பட்டதாக நம்பப்படும் இந்த அனைத்து சிகரெட்டுகளுக்கும் சரக்கு அறிக்கையில் (manifest) எந்த ஒரு அறிவிப்பும் செய்யப் படவில்லை என்பது சோதனையில் தெரிய வந்ததாக அவர் கூறினார்.

"ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களைச் சேர்ந்த நாடுகளில் இருந்து இந்த கொள்கலன்கள் ஏப்ரல் 12ஆம் தேதி கிள்ளான் துறைமுகத்தை வந்தடைந்தன என்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

"இந்த வழக்கு 1967 சுங்கச் சட்டம் பிரிவு 52 (1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது," என்று வடக்கு துறைமுகத்தில் உள்ள சிலாங்கூர் மாநில சுங்கத்துறை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறியதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

அவரின் கூற்றுப்படி, பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளை சிகரெட்டுகளின் மொத்த மதிப்பு, சுங்க வரி உட்பட, RM67,313,400 என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே வேளையில், ஏப்ரல் தொடக்கத்தில் கிள்ளான் துறைமுகத்தின் தடையற்ற வர்த்தக மண்டலத்தில் முன் தயாரிக்கப் பட்ட தரவு மையத் தொகுதி (Prefabricated Data Center Module) வகையிலான 76 கொள்கலன்களையும் சிலாங்கூர் சுங்கத்துறை தடுத்து நிறுத்தியுள்ளது.

சுங்கவரி மற்றும் வரிகளைக் குறைப்பதற்காகத் தவறான கட்டணக் குறியீடு (tariff code) அறிவிக்கப்பட்டது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக முகமட் அசார் தெரிவித்தார்.

"ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒரு நாட்டைச் சேர்ந்த இந்த கொள்கலன்கள் மார்ச் 6ஆம் தேதி கிள்ளான் துறைமுகத்தை வந்தடைந்தன. இது குறித்து 1967 சுங்கச்சட்டம் பிரிவு 133 (1)(a)-இன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

"இந்த 76 கொள்கலன்களின் மொத்த மதிப்பு, சுங்க வரி உட்பட, RM4,726,571 என மதிப்பிடப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

சரியான இறக்குமதி அனுமதி இல்லாதது என நம்பப்படும் 26,400 லிட்டர் பீர் வகை மதுபானம் அடங்கிய ஒரு கொள்கலனை வடக்கு துறைமுகத்தின் தடையற்ற வர்த்தக மண்டலத்தில் சுங்கத்துறை குழு தடுத்து நிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆசியாவைச் சேர்ந்த ஒரு நாட்டைச் சேர்ந்த இந்த கொள்கலன் ஜனவரி 17ஆம் தேதி கிள்ளான் துறைமுகத்தை வந்தடைந்தது என்றும், இதன் மொத்த மதிப்பு சுங்க வரி உட்பட RM 940,896 என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

"தடைசெய்யப் பட்ட பொருட்களை இறக்குமதி செய்யும் குற்றத்திற்காக, 1967 சுங்கச்சட்டம் பிரிவு 135 (1)(a)-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது," என்றார் அவர்.

இது தவிர, கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கிள்ளான் துறைமுகத்தைச் சுற்றியுள்ள உரிமம் பெற்ற கிடங்குகளில் (gudang berlesen) நடத்தப்பட்ட சோதனையின்போது, ஆடி (Audi), வெல்ஃபயர் (Vellfire) மற்றும் முரானோ (Murano) போன்ற பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த ஏழு இறக்குமதி வாகனங்களையும் சிலாங்கூர் சுங்கத்துறை பறிமுதல் செய்தது.

இந்த வாகனங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட சேமிப்பு காலத்தை தாண்டியதோடு, அவற்றுக்கான சுங்கவரி மற்றும் வரிகளும் செலுத்தப்படவில்லை என்பது சோதனையில் தெரிய வந்ததாக முகமட் அசார் கூறினார்.

"இந்த ஏழு வாகனங்களின் மொத்த மதிப்பு சுங்க வரி உட்பட RM658,707 என மதிப்பிடப் பட்டுள்ளது.

"அந்த வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கு 1967 சுங்கச் சட்டம் பிரிவு 135 (1)(d)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.