2 டிக் டாக் கணக்குகள் மூலம் போலித் தகவல்களைப் பரப்பிய குற்றத்திற்கு 4,000 ரிங்கிட் அபராதம்

20 மே 2026, 7:16 AM
2 டிக் டாக் கணக்குகள் மூலம் போலித் தகவல்களைப் பரப்பிய குற்றத்திற்கு 4,000 ரிங்கிட் அபராதம்

சிப்பாங், மே 20: புடி மடாணி RON95 (BUDI95) மானியம் குறித்து தங்களது டிக் டாக் கணக்குகள் மூலம் போலித் தகவல்களைப் பரப்பிய குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு, இன்று செஷன்ஸ் நீதிமன்றம் தலா 4,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.

தனிப்பட்ட ஓட்டுநரான முகமட் அய்மான் ஜைனி சத்தார், 29, மற்றும் மலேசிய சிவில் பாதுகாப்புப் படை (APM) சேவகரான ரோம்பாஸ்லி ஷாம் முகமட் மொக்தார், 46, ஆகியோருக்கு எதிராக நீதிபதி அகமது ஃபுவாட் ஒத்மான் இந்தத் தீர்ப்பை வழங்கினார். அபராதத்தை செலுத்தத் தவறினால், ஆறு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிறரைத் துன்புறுத்தும் நோக்கில், கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று போலி உள்ளடக்கத்தை உருவாக்கிப் பரப்பியதாக முகமட் அய்மான் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்தப் பதிவு, ஏப்ரல் 5 ஆம் தேதி காலை 11 மணியளவில் சைபர்ஜெயாவில் உள்ள MCMC கோபுரம் 1-இல் பார்க்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு, தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-இன் பிரிவு 233(1)(a)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டு, அதே சட்டத்தின் பிரிவு 233(2)-இன் கீழ் தண்டனைக்குரியது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 500,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் கடுமையானது என்றும், அது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் நீதிபதி அகமது ஃபுவாட் கூறினார்.

"நாம் பதிவிடும் கருத்துகளின் விளைவுகள் கடுமையானவை. சில சமயங்களில் அவை குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். இது கையாளப் படாவிட்டால், குழப்பமான சூழ்நிலையை உருவாக்கும். சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யும் போது கவனமாக இருங்கள்," என்று அவர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, முகமட் அய்மான் தனக்கு விதிக்கப் படும் தண்டனையைக் குறைக்குமாறு நீதிமன்றத்தில் முறையிட்டார். தனது வருமானம் நிலையற்றது என்றும், மனைவி மற்றும் இரண்டரை வயதுடைய இரத்தக்க புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையைத் தான் பராமரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (SKMM) வழக்கு அதிகாரியான நஸ்ருல் நிஜாம் முகமட் ஜமேரி அரசு தரப்பில் ஆஜரானார். முகமட் அய்மானுக்கு வழக்கறிஞர் எவரும் பிரதிநிதிக்கவில்லை.

இதற்கிடையில், இதே குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட APM   சேவகர் ரோம்பாஸ்லி ஷாமுக்கும் நீதிபதி 4,000 ரிங்கிட் அபராதம் விதித்தார்.

ஒரு சேவகராக, ரோம்பாஸ்லி ஷாம் அரசாங்கத்தின் கொள்கைகளை பொதுமக்களுக்கு விளக்கும் ஒரு 'அரசாங்க முகவராக' செயல்பட்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, சமூக ஊடகங்களில் பதிவிடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இருவரும் பின்னர் அபராதத்தைச் செலுத்தினர்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.