ஷா ஆலம், மே 4: தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் முதன்மை சக்தியாக விளங்குவதுடன், உயர்ந்த மனிதாபிமான விழுமியங்களைக் கொண்ட 'நாட்டின் மலர்களாக' (Kesuma Bangsa) திகழ வேண்டும் எனச் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
இன்றுடேவான் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற '2026-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில அளவிலான தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில்' கலந்து கொண்டு உரையாற்றிய அவர், போட்டித்தன்மை மிக்க வேலை வாய்ப்பு சந்தையில் அதிக வருமானம் ஈட்டும் வகையில் தொழிலாளர்கள் தங்களின் அறிவையும் திறன்களையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
"தொழிலாளர்கள் பொருளாதார இயக்கத்தின் நாடித் துடிப்பாக மட்டும் இருந்தால் போதாது. நாம் ஒரு 'மடாணி' (Madani) சமூகமாக மாற வேண்டும். இதற்குத் தொழிலாளர்கள் உயர்ந்த மனிதாபிமானம் மற்றும் உண்மையான நேர்மை போன்ற மடாணி விழுமியங்களைக் கொண்டிருப்பது அவசியமாகும்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மாநில மனிதவள மற்றும் ஒற்றுமைத் துறை செயற்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு முன்னிலையில் உரையாற்றிய அவர், ஒரு சிறந்த தொழிலாளி என்பவர் தன்னைத் தானே மாற்றிக்கொள்ளவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், நற்பண்புகளை மேம்படுத்திக்கொள்ளவும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றார். கருணையும் நேர்மையும் கொண்ட தொழிலாளர்களே ஒரு தேசத்தின் உண்மையான பெருமை என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
அதே வேளையில், மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் அரசியல் நெருக்கடியின் தாக்கங்களை எதிர்கொள்ளத் தனியார் மற்றும் பொதுத் துறையினர் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைந்து கைகோர்த்துச் செயல்பட வேண்டும் என அமிருடின் ஷாரி விருப்பம் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதாரச் சவால்களின் பாதிப்பு மக்களை நேரடியாகத் தாக்காத வண்ணம், சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.








