புத்ராஜெயா, மே 01 – ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வூதியர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில், முன்னாள் ராணுவ வீரர் உட்பட இருவர் குற்றவாளிகள் என நிரூபிக்கப் பட்டதை அடுத்து, தைப்பிங் உயர் நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.
பேராக், செலாமாவில் உள்ள ஜாலான் குபு காஜா-லெங்கோங் வனப்பகுதியில், கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10.50 மணிக்குள், முகமது ஸாக்கி எம்.டி. அலுவீ (42) என்பவரைக் கொன்ற குற்றத்திற்காக, முன்னாள் ராணுவ வீரரான முகமது ஹபிட்ஸ் இப்ராஹிம் (39) மற்றும் முஹம்மது அஹ்மத் எம்.டி. யூசோப் (35) ஆகிய இருவருக்கும் நீதிபதி நூர் ருவேனா எம்.டி. நுர்டின் இந்தத் தண்டனையை விதித்தார்.
நேற்றைய தீர்ப்பில், இவ்விருவருக்கும் எதிரான குற்றச்சாட்டை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக நீதிபதி நூர் ருவேனா குறிப்பிட்டார்.
செய்யப்பட்ட குற்றத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
"அரசுத் தரப்பு சமர்ப்பித்த ஒட்டுமொத்த சாட்சியங்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் என்பதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது," என்றார் அவர்.
பாதிக்கப்பட்டவருக்கும் தனது முன்னாள் மனைவிக்கும் இடையே முறையற்ற தொடர்பு இருந்ததாக முகமது ஹபிட்ஸ் கருதியதும், அவர்கள் விவாகரத்துப் பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாததும், அவரைக் கொலை செய்ய தூண்டுகோலாக இருந்ததாக நூர் ருவேனா கூறினார்.
பாதிக்கப்பட்டவர் தாக்கப்பட்ட விதம் மற்றும் அவருக்கு ஏற்பட்ட காயங்களின் தீவிரம் ஆகியவை, இந்தக் கொலை திட்டமிடப்பட்டதைக் காட்டுகிறது. உடனடியாக மரணத்தை விளைவிக்கும் தெளிவான நோக்கம் இருந்ததோடு, அவர் இறந்துவிட்டதை உறுதி செய்வதற்காகவே அவரது முதுகில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
விசாரணையில், 2021 செப்டம்பரில் விவாகரத்துக்குப் பிறகு, முகமது ஹபிட்ஸ் தனது முன்னாள் மனைவியை சந்தித்து, முன்னாள் ராணுவ அதிகாரியான பாதிக்கப்பட்டவருடனான தொடர்பு குறித்துக் கேட்டுள்ளார். ஆனால், அப்பெண் அதனை வன்மையாக மறுத்ததும் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டபோது, தொழிலதிபரான முஹம்மது அஹ்மதும் உடனிருந்தார். முகமது ஹபிட்ஸ் தனது நண்பருடன் வீட்டை விட்டு வெளியேறியபோது, கடைசியாக பாதிக்கப்பட்டவருடன் காணப்பட்டதும் அவரே. எனவே, அவரும் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என நூர் ருவேனா கண்டறிந்தார்.
பாதிக்கப்பட்டவர் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, முஹம்மது அஹ்மத் தான் போலீசாரை சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வழக்கு விவரங்களின்படி, சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப் பட்டது. பாதிக்கப்பட்டவரின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன, மேலும் அவரது உடலில் பல கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டன.
-- பெர்னாமா
ஓய்வூதியரைக் கொன்ற குற்றத்திற்காக இரு நண்பர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது
1 மே 2026, 1:52 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
Man linked to Rocky’s death to be charged Thursday
Kathiravan Manoharan
18 ஆகஸ்ட் 2026

national
சிம்பாங் ரெங்காமில் நிகழ்ந்த கோர விபத்திற்குக் காரணமான நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் இழப்பீடு கோரவும் திட்டமிட்டுள்ளனர்
Pakiya
5 ஜூன் 2026

national
ஊழல் குற்றச்சாட்டை ரத்து செய்வதற்கான ஈசா சமாட்டின் மறுஆய்வு முயற்சி- விசாரணையை கூட்டரசு நீதிமன்றம் ஒத்திவைத்தது
Pakiya
13 மே 2026

selangor
கிள்ளானின் மேரு காவல் நிலையத்தில் கலவரம் செய்த நபர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்; மூவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்
Mavitthran
7 மார்ச் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



