தீ விபத்துக்களை எதிர்கொள்ள 100 ரியாவ், இந்தோனேசியா பள்ளிவாசல்களுக்கு மலேசிய அரசாங்கம் தீயணைப்புக் கருவிகள் (APAR) நன்கொடை

25 ஏப்ரல் 2026, 2:47 AM
தீ விபத்துக்களை எதிர்கொள்ள 100 ரியாவ்,  இந்தோனேசியா பள்ளிவாசல்களுக்கு மலேசிய அரசாங்கம்  தீயணைப்புக் கருவிகள் (APAR) நன்கொடை

கோலாலம்பூர், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- தீ விபத்துக்களை எதிர்கொள்வதில் உள்ளூர் சமூகத்தின் தயார்நிலையை மேம்படுத்தும் முயற்சியாக, இந்தோனேசியாவின் ரியாவ், பெக்கான்பாருவில் உள்ள 100 பள்ளிவாசல்களுக்கு மலேசிய அரசாங்கம் இலகுரக தீயணைப்புக் கருவிகளை (APAR) நன்கொடையாக வழங்கியுள்ளது.

பெக்கான்பாருவில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம் மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்
பட்டது. இது மலேசிய வெளியுறவு அமைச்சால் நிர்வகிக்கப்படும் மலேசியா-இந்தோனேசியா வியூக உறவுகளுக்கான நிதியிலிருந்து பெறப்பட்டதாக பெக்கான்பாருவிற்கான மலேசியத் தூதர், முகமது ஹோஸ்னி ஷகிரான் இஸ்மாயில் கூறினார்.

"இந்த நன்கொடை உள்ளூர் சமூகத்தின் மீது மலேசிய அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையின் அடையாளமாகும்," என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

வெள்ளிக்கிழமை அன்று பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் முகமது ஹோஸ்னி ஷகிரான் இந்தத் தீயணைப்புக் கருவிகளை ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் பெக்கான்பாரு மேயரின் பிரதிநிதியான மார்க்காரியஸ் அன்வாரும் கலந்து கொண்டார்.

இந்த முயற்சி, பெக்கான்பாருவில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைத் துறை (DAMKAR), மற்றும் பெக்கான்பாரு நகர மத விவகார அமைச்சக அலுவலகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

இதற்கிடையில், மார்க்காரியஸ், மலேசியத் துணைத் தூதரகத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு, இந்த நன்கொடை மிகவும் அர்த்தமுள்ள அக்கறையின் அடையாளம் என்றும் குறிப்பிட்டார்.

"தீ விபத்துகளைத் தடுக்க முடியும் என்று நாம் அனைவரும் நம்புகிறோம், ஆனால் அது நிகழ்ந்தால், தீயை அணைப்பதற்கான முதல் படியாக இந்தத் தீயணைப்புக் கருவிகள் அமையும்," என்றார் அவர்.

கடந்த ஆண்டு, மலேசிய-இந்தோனேசியா வியூக உறவுகளுக்கான நிதியுதவியுடன், ரியாவில் உள்ள புசாட் தஹ்ஃபிஸ் மாஹாட் தஃபக்குஹ்வில் உள்ள ஒரு மருத்துவமனையையும் பெக்கான்பாருவில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம் தரம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா


உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.