அலுவலக வாகனத்திலிருந்து சிகரெட் துண்டு வீச்சு: பணியாளர் மீது விசாரணை நடத்த ஷா ஆலம் மாநகராட்சி உத்தரவு

23 ஏப்ரல் 2026, 4:17 AM
அலுவலக வாகனத்திலிருந்து சிகரெட் துண்டு வீச்சு: பணியாளர் மீது விசாரணை நடத்த ஷா ஆலம் மாநகராட்சி உத்தரவு

ஷா ஆலம், ஏப்ரல் 23: ஷா ஆலம் மாநகராட்சிக்கு (எம்பிஎஸ்ஏ) சொந்தமான அதிகாரப்பூர்வ வாகனத்திலிருந்து அதன் பணியாளர் ஒருவர் சிகரெட் துண்டை வெளியே வீசியதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து உடனடியாக விசாரணை நடத்த மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் மத்தியில் பெரும் கண்டனங்களைப் பெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக ஷா ஆலம் மாநகராட்சி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்த விவகாரம் மேல் விசாரணைக்காகவும் தகுந்த நடவடிக்கைக்காகவும் தற்போது மாநகராட்சியின் ஒழுங்கமைப்புக் பிரிவிடம் (Bahagian Integriti) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை நடவடிக்கைகளானது, ஷா ஆலம் மாநகராட்சி அதிகாரிகள் நடத்தை மற்றும் ஒழுங்குமுறை விதிகள் 2023-இன் கீழ் முறையாக மேற்கொள்ளப்படும் என்றும் மாநகராட்சி உறுதி அளித்துள்ளது.

நேற்று முதல் சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த குறுகிய காணொளியில், மாநகராட்சி வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர், சிகரெட் துண்டை ஜன்னல் வழியாக வெளியே வீசுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

பொதுச் சேவையாளர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணுவதற்கான முயற்சிகளுக்கு எதிராகவும் அமைந்துள்ள இந்தச் செயல், இணையவாசிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து கருத்துரைத்த மாநகராட்சி நிர்வாகம், தனது ஊழியர்களின் எத்தகைய தவறான நடத்தைகளையும் சகித்துக்கொள்ளப் போவதில்லை என்றும், இதில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அனைத்துப் பணியாளர்களும் எப்போதும் விதிமுறைகளைப் பின்பற்றி, பொதுச் சேவையின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் மிகுந்த அறநெறியுடன் கடமையாற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, ஒரு பொதுச் சேவை நிறுவனம் என்ற முறையில் சமூகத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டிய மாநகராட்சி, தனது பணியாளர்கள் மத்தியில் நேர்மை மற்றும் தொழில்முறை பண்புகளை வலுப்படுத்துவதில் தொடர்ந்து உறுதியுடன் செயல்படப்போவதாகவும் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.